தமிழ்நாடு

சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட மூவர் - மாவு கட்டுடன் மருத்துவமனையில் அனுமதி

சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட மூவர் - மாவு கட்டுடன் மருத்துவமனையில் அனுமதி

PT

பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் காலில் மாவு கட்டுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணிடம் நேற்று முன்தினம் இரவு சில சமூக விரோதிகள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி அவர் அணிந்திருந்த நகைகளைப் பறித்துச் சென்றதாகப் புதுக்கோட்டை எஸ்பி அருண் சக்தி குமாருக்குப் புகார் வந்தது. புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த எஸ்பி அருண் சக்தி குமார் தனிப்படை அமைத்துக் கொள்ளையர்களைப் பிடிக்க உத்தரவிட்டார்.

அதன் படி கீரனூர் டிஎஸ்பி பிரான்சிஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களைத் தேடி வந்தனர். இந்தத் தேடுதல் வேட்டையில் தலைமறைவாகியிருந்த திருச்சி மாவட்டம் எடமலைபுதூரைச் சேர்ந்த முருகன், நந்தகுமார், ஹேமராஜ் ஆகிய 3 பேரையும் காவலர்கள் சுற்றிவளைத்தனர்.

இதனையடுத்து மூவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்துகொண்டிருந்த போது போலீசாரின் பிடியிலிருந்து அவர்கள் தப்பித்து இருசக்கர வாகனத்தில் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது நிலைதடுமாறி மூவரும் கீழே விழுந்ததில் அவர்களின் கால் உடைந்து எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து மூவருக்கும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலில் மாவு கட்டுப் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து 4 போலீசார் தொடர்ந்து அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மூவர் மீதும் பல்வேறு வழிப்பறி மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.