கிருஷ்ணகிரியில் அண்ணன் இறந்த சோகத்தில் மாரடைப்பு ஏற்பட்டு தம்பியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் இளையராஜா (42). கூலி வேலை செய்து வந்த இவருக்கு மனைவி, 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தொடர்ந்து நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டு வந்த இவர், புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று விடியற்காலை சுமார் 3 மணி அளவில் அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் இறந்து போன தகவல் சிங்காரப்பேட்டையில் உள்ள உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த இவரது தம்பி சொக்கலிங்கம் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை 5 மணி அளவில் டீக்கடையில் அமர்ந்து அழுது கொண்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலே சொக்கலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இறந்து போன சொக்கலிங்கத்துக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அதில் ஒரு மகன் மாற்றுத்திறனாளி குழந்தையாகும். அண்ணன், தம்பி இருவரின் அடுத்தடுத்த மரணத்தால் சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகர் கிராமமே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. இருவரின் உடல்களையும் ஒரே இடத்தில் வைத்து உறவினர்கள் கதறி அழுந்து வருவது பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.