சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் கோப்புப்படம்
தமிழ்நாடு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண் விபரீத முடிவு... கொலையா? தற்கொலையா?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய காத்திருப்பு அறையில் அமர்ந்த நிலையில் உயிரிழந்த பெண்ணால் பரபரப்பு. கொலையா? தற்கொலையா என போலீசார் விசாரணை.

PT WEB

செய்தியாளர் - அன்பரசன்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முதல் மாடியில் உள்ள காத்திருப்பு அறையில் இன்று காலை ரயில்வே தூய்மை பணி ஊழியர்கள் சுத்தம் செய்ய சென்றனர். அப்போது, அங்கு காத்திருப்பு இரும்பு கட்டிலில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சரியாக 6:30 மணியளவில் சென்ட்ரல் ரயில்வே போலீசார் முதல் மாடியில் உள்ள காத்திருப்பு அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது, சுமார் 26 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அமர்ந்த நிலையில் உயிரிழந்திருப்பதைக் கண்டனர். பின், உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த பெண்ணின் அருகில் பணம் சிதறி கிடந்ததை போலீசார் கண்டெடுத்துள்ளனர். இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக ரயில் நிலைய காத்திருப்பு அறையில் தற்கொலை செய்து கொண்டார்? அல்லது இறப்பில் ஏதேனும் மர்மம் உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி பெண் குறித்த விவரங்கள் சேகரித்து வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.