காய்த்ரி தேவி புதிய தலைமுறை
தமிழ்நாடு

”ஓபிஎஸ் மகன் எனக்கு கொடுத்த செக்ஸ் டார்ச்சர் குறித்து புகார் கூறியுள்ளேன்” - இளம்பெண் குற்றச்சாட்டு!

பாலியல் தொல்லை கொடுப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் மீது இளம்பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

Prakash J

ஓபிஎஸ் மகன் மீது இளம்பெண் புகார்

புகார் அளித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய இளம்பெண் காயத்ரி தேவி, “டிஜிபி சங்கர் சாரை நேரடியாகவே சந்தித்து என்னுடைய புகாரை அளித்தேன். என்னுடைய குறைகளையும் அவரிடம் தெரிவித்தேன். ஓபிஎஸ் மகன் என்னை மிரட்டுவதும் செக்ஸ் ரீதியாக டார்ச்சர் செய்வதும் குறித்தும் அவரிடம் தெரியப்படுத்தினேன். அவர் அனைத்தையும் பார்த்தபிறகு, இதில் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக சொன்னார்.

’இதுகுறித்த ஆதாரங்களை தாம்பரம் சிசிபி-இல் கொடுத்துவிடுங்கள்’ என்றார். தொடர்ந்து, ’உங்களின் பாதுகாப்புக்கும் உறுதி அளிக்கிறேன்’ என்றார். இதனால் நான் மன உறுதியோடு வந்திருக்கிறேன். அவரிடம் புகார் அளித்தது திருப்தியாக உள்ளது. கண்டிப்பாக, அவர் செய்வார் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது” என்றவரிடம் செய்தியாளர்கள் “இதில் எந்த மாதிரியான ஆதாரங்களைத் தாக்கல் செய்யப் போகிறீர்கள்” எனக் கேள்வி எழுப்பினர்.

ரவீந்திரநாத்

ரவீந்திரநாத் மனைவி பேசியது என்ன?

அதற்கு அவர், “சைபர் கிரைமில்தான் கொடுக்க வேண்டும். அவர் செய்தது எல்லாம் வாட்ஸ்அப் கால்கள் மற்றும் குறுஞ்செய்திகள்தான். ஆகையால், சைபர் கிரைம் போலீசார் கேட்டால், என் போனில் உள்ள அனைத்து ஆதாரங்களையும் கொடுத்துவிடுவேன். இதுதொடர்பாக ரெக்கார்டிங் எதுவும் இல்லை. ஆனால், ரவீந்திரநாத்தின் மனைவி நேற்று என்னிடம் பேசினார். அவர் பேசிய ரெக்கார்டை மட்டும் வைத்துள்ளேன். அவர், ‘ஏன் போய் புகார் கொடுத்தீர்கள்; என்னிடம் ஒருவார்த்தை சொல்லி இருக்கலாம் அல்லவா’ எனக் கேட்டார். அதற்கு நான், ‘இந்தப் பிரச்னைதான் போய்க் கொண்டிருப்பதுதான் உங்களுக்குத் தெரியுமே? உங்கள் வீட்டில் நடவடிக்கை எடுக்கவில்லை. ஓபிஎஸ் சாரை பார்த்தும் நான் புகார் கொடுத்துவிட்டேன். அப்படி இருக்கும்போது நான் என்ன செய்ய முடியும்? நீங்களும் ஹெல்ப் லெஸ்ஸாக இருக்கிறீர்கள். உங்களுக்கும் அதிகாரம் இல்லாதபோது, நான் என்ன செய்ய முடியும்? அதனால்தான் நேரிடையாகவே சென்று புகார் அளித்துவிட்டேன்.

‘என் பெயரைச் சொல்லாதீர்கள்!’

அதற்கு அவர், என் பெயர் எதற்கு வந்தது என வருத்தப்பட்டாரே தவிர, இந்த விஷயம் குறித்து வருத்தப்பட்டதாக தெரியவில்லை. ’அதனால், பரவாயில்லை ஆனந்தி. நான் என் பிரச்னையைப் பார்த்துக் கொள்கிறேன். கண்டிப்பாக, உன் கணவர் செய்வது நன்றாக இல்லை. ஆதலால் நான் பார்த்துத்தான் ஆக வேண்டும்’ என அவரிடம் சொல்லிவிட்டேன். அதற்கு அவர், ‘புகார் அளிப்பதாக இருந்தால் என் கணவரின் பெயரை மட்டும் கொடுக்க வேண்டியதுதானே. என் பெயர், குடும்பம் பற்றி எல்லாம் எதற்குக் கொடுக்க வேண்டும்’ எனக் கேட்டார். அதற்கு நான், ‘அப்படி எல்லாம் இல்லை ஆனந்தி. எல்லா விவரங்களையும்தான் கேட்பார்கள். தலையும் வாலும் எல்லாமே சொல்லாமல் நாம் ஒரு விஷயத்தைச் சொல்ல முடியாது. என்னால் பாதி கொடுத்து மீதி கொடுக்காமல் இருக்க முடியாது. நீங்கள் கொடுத்தாலும்கூட அப்படித்தான் கொடுக்க வேண்டி இருக்கும். என்னைக் கேட்டதால்தான் நான் அனைத்தையும் கொடுத்திருக்கேன் ஆனந்தி’ என்று சொன்னதற்கு அவர், ‘என் பெயரைச் சொல்லாமல் நீங்கள் வழக்கை நடத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்” என காயத்ரி தெரிவித்தார்.

இயக்குநரின் மனைவியுடன் தொடர்பு

தொடர்ந்து அவரிடம், முத்துமலர் பெயர் குறித்தும் அவரைப் பற்றிய தகவல்கள் குறித்து சொல்லும்படியும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு காய்த்ரி, “அவர் (முத்துமலர்) ரோல் ஒன்றும் இல்லை. முத்துமலர் விவாகரத்து வாங்கி வந்ததுபோல் எல்லோரும் வந்துவிடுவார்கள் என அவர் நினைக்கிறார். ஆனால், அவரை எல்லாம் விவாகரத்து செய்ய வைக்கப்பட்டு வந்தார். அவர்கள் ஏற்கெனவே ஒரு தொடர்பில் (affair) இருந்தார்கள். அதன்பிறகே கணவரிடமிருந்து விவாகரத்து வாங்கி இங்கே வந்தார். அதைப்போலவே பெண்கள் குடும்ப பாதிப்பில் இருந்தால் இங்கே வந்துவிடுவார்கள் என ஒரு தவறான எண்ணத்தில் இருக்கிறார். இயக்குநர் பாலாவைத் திருமணம் செய்துகொண்டவர் முத்துமலர். இவருக்கும் ரவீந்திரநாத்துக்கும் தொடர்பு இருப்பதை அறிந்து இயக்குநர் பாலா, முத்துமலரை விவாகரத்து செய்துவிட்டார். தற்போது அவர்கள் தனியாக இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் தொடர்பில் இருந்ததனாலேயேதான் விவாகரத்தே ஆனது.

”இது என்னுடைய தனிப்பட்ட பிரச்னை”!

நான் சமூகச் சேவைகளைச் செய்துவருகிறேன். நான் பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களில் இருக்கிறேன். ஏதாவது ஒரு பிரச்னை என்றாலும் எல்லோரும் போய் சேர்ந்து செய்வோம். என்னுடைய பிரச்னைக்குக்கூட அவர்கள் வருவதாகச் சொன்னார்கள். ஆனால் ’நான் யாரும் வேண்டாம். இது என்னுடைய தனிப்பட்ட பிரச்னை. நானே இதைச் சமாளித்துக் கொள்கிறேன்’ எனச் சொல்லிவிட்டேன். அதனால்தான் நான் சமூகச் சேவை செய்வதைக்கூட எங்கும் சொல்லவில்லை. இந்த விஷயம் கடந்த அக்டோபர் மாதம் முதல் நடக்கிறது. இதை புகாரில் தெரிவித்துள்ளேன். தவிர, அவர்களை 8-9 வருடங்களாகத் தெரியும். அதுபோல் அவர்களுக்கும் எனக்கு எந்த அரசியல் பலமும் இல்லை; நான் ஒரு சாதாரண தனி நபர் என நன்றாகவே தெரியும். அரசியலில் இருப்பதால் அவர்கள் தப்பிக்கலாம் என நினைக்கிறார்கள்.

என் கணவரை விவாகரத்து செய்ததன் காரணம்

ஆனால் எனக்கு சமூகச் சேவையின் உதவிகூட வேண்டாம். நான் அனைத்துக்கும் ஆதாரங்கள் வைத்துள்ளேன். என்னைக் கேள்வி கேட்பதுபோல் அவரிடம் ஆயிரம் கேள்வி கேளுங்கள். கண்டிப்பாக, அவரிடம் பதில் இருக்கும். ஆனால், அவர் சொல்ல முடியாது. அப்படி அவர் சொன்னார் என்றால், அவர் கண்டிப்பாக மாட்டிக் கொள்வார். அடுத்து இதுதொடர்பாக தமிழக முதல்வரைச் சந்திப்பேன். அவர்மூலமும் எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றால், கட்டாயம் பிரதமரைத்தான் சந்திப்பேன். என்னுடைய பாதுகாப்புக்காகத்தான் இங்கே வந்தேன்.

நான் என் கணவரை விவாகரத்து செய்ததற்கான நியாயமான காரணம் என் மாமியாருக்குத் தெரியும். அந்தக் காரணமாகத்தான் என் மாமியார் என்கூட இருக்கிறார்” இவ்வாறு கூறினார்.