தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்டோர் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
மதுரையில் மொத்தம் 110 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில் மடீஸியா வளாகத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள குவிந்தனர். 600 பேருக்கு மட்டுமே இங்கு தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
திருப்பூரில் நஞ்சப்பா பள்ளி, கந்தசாமி மருத்துவமனை பங்களா ஸ்டாப், நெசவாளர் காலனி உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 18 வயதுக்கு மேற்பட்டோர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திச் சென்றனர். புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆலத்தம்பாடி, விளக்குடி, திருத்தங்கூர் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.
சென்னையில் ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட ஐயப்பன் தாங்கல், மவுலிவாக்கம், கோவூர் உள்ளிட்ட 10 ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இப்பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடக்கி வைத்தார்.
அதேபோல் சேலத்திலும் இளைஞர்கள் ஆர்வத்துடன் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மாநகராட்சிப் பகுதிகளில் 11 மையங்களில் மட்டுமே தடுப்பூசி போடப்படுவதால் சிரமத்தைப் போக்க கூடுதல் மையங்களை தயார் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்