தமிழ்நாடு

’கடனை திரும்பத்தராமல் தற்கொலைக்கு தூண்டுகிறார்’ - தொண்டு நிறுவன உரிமையாளர் மீது புகார்

’கடனை திரும்பத்தராமல் தற்கொலைக்கு தூண்டுகிறார்’ - தொண்டு நிறுவன உரிமையாளர் மீது புகார்

webteam

வங்கிகள் மூலம் பெற்றுக்கொடுத்த கடனை திரும்ப செலுத்தாமல் தன்னை தற்கொலைக்கு தூண்டுவதாக தொண்டு நிறுவனம் நடத்திவரும் நபர் மீது இளைஞர் ஒருவர் சேலம் மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனபால் என்பவர் கோவையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் இவரது நண்பர் ஒருவர் மூலம் சேலத்தை சேர்ந்த நீலமேகம் என்பவருக்கு பல்வேறு வங்கிகள் மூலமாக பணம் பெற்று ரூபாய் 80 லட்சம் கடனாக வழங்கியுள்ளார். இதற்கான தவணை தொகையை நீலமேகம் கடந்த இரண்டு மாதமாக வங்கியில் செலுத்தாத நிலையில் தனபால் அவரிடம் கேட்ட பொழுது தன்னை மிரட்டியதாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சேலம் மாநகர காவல் ஆணையாளரிடம் தனபால் புகார் மனுவும் அளித்துள்ளார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர் நீலமேகத்திடம் கேட்டபோது, தான் கடனாக பெற்ற தொகைக்கு தனபால் ரூபாய் 4 லட்சம் கமிஷன் பெற்றுக் கொண்டதாகவும், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தவணைத்தொகை செலுத்த முடியாமல் போனது. இருப்பினும் ஜனவரி மாத இறுதிக்குள் நிலுவைத்தொகை மற்றும் வழக்கமாக செலுத்தவேண்டிய தவணைத் தொகையை செலுத்துவதாக உறுதியளித்தும், தனபால் முழு தொகையையும் உடனடியாக ரொக்கமாக வழங்க வேண்டும் என்று கேட்டும், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வெளிநபர்களைக் கொண்டு மிரட்டுவதாகவும் விளக்கமளித்தார்.

இது தொடர்பாக சூரமங்கலம் காவல் நிலையத்திலும் தான் புகார் அளித்துள்ளதாக நீலமேகம் தெரிவித்தார்.