தமிழ்நாடு

பெண் கேட்டுச் சென்ற போது காதலியின் தந்தை தாக்கியதால் விரக்தி.. இளைஞர் விபரீத முடிவு!

பெண் கேட்டுச் சென்ற போது காதலியின் தந்தை தாக்கியதால் விரக்தி.. இளைஞர் விபரீத முடிவு!

webteam

ஆரணி அருகே காதலியை பெண் கேட்டு வீட்டிற்குச் சென்ற வாலிபரை அச்சிறுமியின் தந்தை தாக்கியதால் மனமுடைந்த காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலன் தந்தையை கைது செய்யக்கோரி இறந்தவரின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கஸ்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஏழுமலை - செல்வராணி தம்பதியினருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் மூத்த மகன் சாமராஜ் (21). இவர் சென்னை தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் - அஞ்சலை தம்பதியினருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். தம்பதியினரின் மூத்த மகள் ஈஸ்வரி (17) களம்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகின்றார். கடந்த 2 ஆண்டுகளாக சாம்ராஜ் - ஈஸ்வரி இருவரும் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்ததால் காதலுக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், ஈஸ்வரியை தனது உறவினருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஈஸ்வரி, சாம்ராஜின் உறவை துண்டித்து பேச்சு வார்த்தையை அடியோடு நிறுத்தி விட்டதாகத் தெரிகிறது. மேலும் நேற்று காலையில் சாம்ராஜ் மற்றும் அவனுடைய நண்பர்கள் முகேஷ், சந்தோஷ் ஆகியோர் ஈஸ்வரி வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளனர். அப்போது ஈஸ்வரி சாம்ராஜிடம் பேச விரும்பவில்லை எனவும், தனது உறவினர் விஜய் என்பவரை திருமணம் செய்துகொள்வதாகவும் தெரிவித்ததன் பேரில் சாம்ராஜ் - ஈஸ்வரி ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை வெங்கடேசன், சாம்ராஜை கடுமையாக தாக்கியுள்ளார். நடந்த சம்பவத்தை சாம்ராஜ் தனது உறவினர் சம்பத் என்பவரிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். பின்னர் மனமுடைந்த சாம்ராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனைப் பார்த்த சாம்ராஜின் தாய் செல்வராணி கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சாம்ராஜை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் ஏற்கனவே சாம்ராஜ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரித்த நிலையில், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கபட்டுள்ளது.

இதனையடுத்து சாம்ராஜை தாக்கிய பெண்ணின் தந்தை வெங்கடேசனை கைது செய்யக்கோரி சாம்ராஜ் உறவினர்கள் களம்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, பின்னர் ஆரணி திருவண்ணாமலை சாலையில் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தகவலறந்து வந்த களம்பூர் போலீசார், வெங்கடேசனை கைது செய்வதாக உறுதியளித்தன் பேரில் சாம்ராஜின் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் இப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

தலைமறைவான வெங்கடேசனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆரணி அருகே காதலியை பெண் கேட்டுச்சென்ற காதலனுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.