தொப்பூர் அருகே கோழியை விழுங்கிவிட்டு வயல்வெளியில் படுத்திருந்த மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் இளைஞர் ஒருவர் ஒப்படைத்தார்.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே கருக்கானூர் கிராமத்தில் வயல்வெளியில் மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கி மயக்க நிலையில் இருந்தது. இதனைக் கண்ட நிலத்தின் உரிமையாளர் கண்ணப்பன் அந்த மலைப்பாம்பை பிடிக்க தருமபுரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
ஆனால் வனத்துறையினர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனையடுத்து கண்ணப்பன் தனது நண்பர்கள் உதவியுடன் மலைப்பாம்பை இலாவகமாக பிடித்துள்ளார். அதனை சாக்குபையில் அடைத்து வைத்து வனத் துறையினருக்காக காத்திருந்துள்ளார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் தருமபுரியில் இருந்து வனத்துறையினர் வராததால், பிடித்த மலைப்பாம்பை ஒரு கோணிப்பையில் வைத்து கட்டிக்கொண்டு, தனது நண்பர் வடிவேலுடன், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கண்ணப்பன் எடுத்து வந்தார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த வனத்துறையினரிடம் ஆறரை அடி நீளம்கொண்ட மலைப்பாம்பை இளைஞர் கண்ணப்பன் ஒப்படைத்தார். இதனை பெற்றுக்கொண்ட, வனத்துறையினர் மலைப்பாம்பை தொப்பூர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர்.