நாகையில் இளம் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி தற்போது கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படும் காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தொண்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவருக்கும் நாகை மாவட்டம் திட்டச்சேரியில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் விவேக் ரவிராஜ் என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் தனிமையில் இருந்ததன் விளைவாக அப்பெண் கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான தகவல் தெரியவரவும், தப்பித்துக்கொள்ள எண்ணிய விவேக் ரவிராஜ், அப்பெண்ணிடம் ஒரு வருடத்திற்குப் பின் திருமணம் செய்துகொள்ளலாம் எனக் கூறியுள்ளார். அத்துடன் கருவை கலைத்து விடுமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, மருத்துவர் மூலம் கருக்கலைப்பும் செய்துள்ளார். நாளடைவில் அப்பெண்ணிடம் பேசுவதை தவிர்க்கவே, சந்தேகம் அடைந்த தேவி தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். இதில் கோபமடைந்த காவல்துறை அதிகாரி விவேக் ரவிராஜ், நடந்ததை வெளியில் கூறினால் குடும்பத்துடன் கொன்றுவிடுவேன் என மிரட்டுவதாக அப்பெண்ணை கூறியுள்ளார். திருமணம் செய்து கொள்ளும்படி கதறி அழும் தன்னை கொச்சை வார்த்தைகளால் ஒருமையில் பேசி மிரட்டுவதாக அவர் கூறுகிறார். இதுதொடர்பான ஆடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிரட்டல் தொடர்பாக நாகை மற்றும் சென்னை காவல்துறை அலுவலகங்களில் விவேக் ரவிராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பெண் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் விவேக் ராஜ், மயிலாடுதுறை அரசியல் வட்டாரங்களில் உள்ள முக்கிய புள்ளிகள் மற்றும் ரவுடிகளை அனுப்பி கொடுத்த புகாரை வாபஸ் பெற வேண்டும் என கொலை மிரட்டல் விடுத்து வருவதாக பாதிக்கபட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
காதலித்து ஏமாற்றியது, சட்டத்திற்கு விரோதமாக கருவை கலைத்தது, கொலை மிரட்டல் விடுத்தது என அத்தனைக்கும் ஆடியோ ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையிலும், உதவி ஆய்வாளர் மீது காவல்துறை அதிகாரிகள் இதுவரை துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என அப்பெண் கூறியுள்ளார்.