தமிழ்நாடு

நேற்று ரகு.. இன்று சுபஸ்ரீ : இன்னும் எத்தனை உயிர்களை கொல்லுமோ பேனர் கலாசாரம்

நேற்று ரகு.. இன்று சுபஸ்ரீ : இன்னும் எத்தனை உயிர்களை கொல்லுமோ பேனர் கலாசாரம்

rajakannan

சாலையின் நடுவில் வைக்கப்பட்ட பேனரால் சென்னையில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் மேலே விழுந்ததில், இருசக்கர வாகனத்த்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் தவறி விழுந்து லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சென்னை பள்ளிக்கரணை அருகே அதிமுக நிர்வாகி ஒருவர் திருமண நிகழ்ச்சிக்காக சாலையின் நடுவே வைத்திருந்த பேனரால்தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. லாரியின் டயரில் சிக்கியை சுபஸ்ரீ துடிதுடித்து இறந்துள்ளார். ரத்த வெள்ளத்தில் அவர் இறந்து கிடக்கும் புகைப்படம் பார்ப்பவர்கள் கண்களை கலங்க வைக்கிறது. குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ கனடாவுக்கு செல்லும் கனவில் தேர்வு எழுதிவிட்டு திரும்பிய போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சாலையில் அத்துமீறி வைக்கப்படும் பேனர்களால் இதுபோன்ற விபத்துக்கள் நிகழ்வது தொடர் கதையாகி வருகிறது. இதற்கு முன்பாக, கோவையிலும் இதேபோன்ற சம்பவம் நடைபெற்றது. சாலையின் வளைவின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் மோதி ரகு என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். 2017ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுக் கம்பத்தினால்தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. 

ரகு உயிரிழந்த இடத்திலேயே Who Killed Ragu என்ற வாசகத்தை அவரது நண்பர்கள் சிலர் எழுதினர். சமூக வலைதளங்களிலும் #WhoKilledRagu என்ற ஹேஷ்டேக் அப்போது பிரபலமானது. நீதிமன்றத்திற்கு இதுதொடர்பான வழக்கு சென்ற போது, அலங்கார வளைவால்தான் விபத்து ஏற்பட்டத்தை உறுதி செய்த நீதிமன்றம், இதுபோன்று நடுரோட்டில் பேனர்கள் வைப்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தது.

அன்று ரகு என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில் தற்போது சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் கலாச்சாரத்திற்கு பலியாகியுள்ளார். நீதிமன்றம் பேனர்கள் வைப்பது தொடர்பாக கடுமையாக கட்டுப்பாடுகளை விதிக்க உத்தரவிட்டு வருகிறது. ஆனால், அந்த விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படாததால் இதுபோன்ற துயர சம்பவம் அரங்கேறி வருகின்றன. 

அரசியல் கட்சிகளின் தலைமை தங்களது தொண்டர்களுக்கு வலியுறுத்தினால் மட்டுமே இதுபோன்ற அனுமதியின்றி மக்களுக்கு ஆபத்தான வகையில் பேனர்கள் வைக்கும் கலாச்சாரத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.