தமிழ்நாடு

“சஞ்சய் தத்தை போல பேரறிவாளனை விடுவிக்கலாம்” - வெளிவந்த உண்மை

“சஞ்சய் தத்தை போல பேரறிவாளனை விடுவிக்கலாம்” - வெளிவந்த உண்மை

webteam

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை விடுவிக்க மத்திய அரசிடம் மாநில அரசு அனுமதி பெறவில்லை என்ற தகவல் ஆர்டிஐ மூலம் வெளிவந்துள்ளது.

சஞ்சய் தத் விடுவிக்கப்பட்ட தகவல்களை பற்றி பேரறிவாளனின் வழக்கறிஞர் பிரபு பேசினார். அவர் கூறும்போது, “மகாராஷ்டிராவின் எரவாடா சிறை அதிகாரிகளிடம் நாங்கள் ஒரு மனு அளித்திருந்தோம். அதில் சஞ்சய் தத்தை விடுதலை செய்ததற்கு மத்திய அரசின் அனுமதி வாங்கியிருந்தீர்களா ? எனக் கேட்டிருந்தோம். ஆனால் அவர்கள் தகவல்களை தரமுடியாது என தெரிவித்தனர். இதுதொடர்பாக நாங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கோரிக்கை விடுத்திருந்தோம். இந்நிலையில் தற்போது தான் அந்த தகவல் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. 

அதில், சஞ்சய் தத்தை நன்னடத்தை காரணமாக விடுவிடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிக்கலான விஷயம் என்னவென்றால், சஞ்சய் தேசிய குற்றத்தில் ஈடுபட்டு மத்திய அரசின் தடா சட்டத்தில் தண்டனை பெற்றவர். இவரை மத்திய அரசின் அனுமதியின்றி மாநில அரசு விடுவித்துள்ளனர். அத்துடன் அவர் சிறையில் இல்லாத 8 மாதங்களையும் நன்னடத்தை சிறக்காலத்தில் சேர்த்துள்ளனர். அதை கணக்கிட்டே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் எந்த வித வழக்கிலும் ஒருவரை நன்னடத்தை மூலம் மாநில அரசு விடுவிக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. 

இந்த வழக்கும் ராஜீவ் கொலை வழக்கும் சிபிஐ-யால் விசாரிக்கப்பட்ட வழக்குகள். இரண்டு தடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்ட வழக்கு. இரண்டுமே பயங்கர ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட வழக்கு. இந்த வழக்கிலும் சரி, எங்கள் வழக்கிலும் சரி இன்னும் தேடப்படும் குற்றவாளிகள் இருக்கின்றனர். ஆனால் எங்கள் வழக்கில் மட்டும் மத்திய அரசுக்கு மட்டும் உரிமை இருப்பதாக வஞ்சிக்கப்படுகிறது. இதன்மூலம் அரசமைப்பு சட்டப்பிரிவு 161ன் படி மாநில அரசே பேரறிவாளனை விடுவிக்கலாம் என்பது உறுதியாகியுள்ளது” என தெரிவித்தார்.