கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் சூழலில், தமிழ்நாட்டில் மே ஒன்றாம் தேதி முதல் மீண்டும் வெப்ப அலை தாக்கம் தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
முன்எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவி வரும் சூழலில், தமிழகத்திற்கு அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
குறிப்பாக ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் ஒரே நேரத்தில் தமிழகத்தில் அதிக மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுவிக்கப்படுவது இதுவே முதல் முறை என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க மே ஒன்றாம் தேதி முதல் தமிழகம், புதுச்சேரியில் மீண்டும் வெப்ப அலை தாக்கம் தொடரும் என தெரிவிக்கிறார், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான். தமிழ்நாட்டில் தற்போது நிலவும் வானிலைக்கு "HOT AND HUMIDITY WEATHER" என பெயரிட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே ஒன்றாம் தேதிக்கு பிறகு பல இடங்களில் அதிகபட்சமாக 115 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மே 5ஆம் தேதி தமிழக உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.