தமிழ்நாடு

கவிஞர், எழுத்தாளர் கலா ப்ரியாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

கவிஞர், எழுத்தாளர் கலா ப்ரியாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

webteam

ஸீரோ டிகிரி பப்ளிஷிங் இலக்கிய விருது 2022க்கான பரிசளிப்பு விழா நேற்று (டிச.,10) மாலை சென்னை ராஜா அண்ணாமலை புரத்திலுள்ள முத்தமிழ்ப் பேரவை – ராஜரத்னம் கலை அரங்கத்தில் நடைபெற்றது.

கவிஞரும் எழுத்தாளருமான கலாப்ரியா அவர்களுக்கு 2022ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. எழுத்தாளர்கள் அ. மார்க்ஸ், யுவன் சந்திரசேகர், பா. ராகவன், இரா. முருகன், மாலன், தேவேந்திரபூபதி, கவிஞர் யவனிகா ஸ்ரீராம், சந்தியா பதிப்பகம் நடராஜன், வழக்கறிஞர் சுமதி, ஸீரோ டிகிரி பப்ளிஷிங் பதிப்பாளர்கள் ராம்ஜி, காயத்ரி ஆகியோர் இணைந்து கலா ப்ரியாவிற்கான நினைவுப் பரிசையும், 1,50,000 ரூபாய்க்கான காசோலையையும் அளித்தனர்.

முன்னதாக கலா ப்ரியாவின் அமர்வில் வழக்கறிஞர் சுமதி, சந்தியா பதிப்பகம் நடராஜன், தேவேந்திர பூபதி, யவனிகா ஸ்ரீராம் ஆகியோர் கலா ப்ரியாவின் படைப்புலகம் குறித்தும், அவருடனான தங்கள் நினைவுகள் குறித்து உரையாற்றினர். இறுதியாக கலா ப்ரியா ஏற்புரை வழங்கினார்.

தன் கவிதைகளில் வளையவரும் சசி பற்றியும், தான் கவிதை எழுத வந்த காலத்தைப் பற்றியும், வானம்பாடி, கசடதபற இதழ்கள் தன் இலக்கிய வாழ்வில் செய்த பங்களிப்பு பற்றியும், தன் முன்னோடிகள் மற்றும் சமகாலத்தில் எழுத வந்தவர்கள் பற்றிய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.

ஸீரோ டிகிரி பப்ளிஷிங் சார்பாக நடத்தப்பட்ட சிறுகதை, குறு நாவல், நாவல் போட்டிக்கான பரிசுகள், நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. ஸீரோ டிகிரி இலக்கிய விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட 10 சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பு, 6 குறுநாவல்கள் அடங்கிய குறுநாவல் தொகுப்பு, நாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 நாவல்கள் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் சார்பாக வெளியிடப்பட்டது. சிறுகதைப்போட்டியில் பரிசு வென்ற பத்து நபர்களுக்கு தலா 10000, குறு நாவலில் பரிசு பெற்ற ஆறு நபர்களுக்கு தலா 20,000 வழங்கப்பட்டது.

நாவல் போட்டியில் மூன்றாம் பரிசை வென்ற ஹபீபி நாவலை எழுதிய அமல்ராஜ் ப்ரான்ஸிஸ்கு ரூபாய் 50,000 காசோலையும், இரண்டாம் பரிசை வென்ற கொம்பேறி மூக்கன் நாவலுக்கு 1,00,000 காசோலையும் வழங்கப்பட்டது. மெளனன் யாத்ரிகா ஏற்புரை வழங்கினார்.

ஸீரோ டிகிரி பதிப்பாளர் ராம்ஜி புதிதாக எழுத வருபவர்களுக்கான அங்கீகாரம், ஊக்கத்திற்கான தேவையையும், இம்மாதிரியான இலக்கியப்போட்டிகள் தரும் வெளிச்சத்தையும் குறிப்பிட்டுப் பேசினார். ஸீரோ டிகிரி பதிப்பகம் செயல்படுவதற்கு உத்வேகமளிக்கும் எழுத்தாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியை ஸீரோ டிகிரி பப்ளிஷிங், JMB மோட்டார்ஸ், ரெப்ரோ இந்தியா, தமிழரசி அறக்கட்டளை, நாகர்கோவில் ஆர்யபவன் ஆகியோர் இணைந்து நடத்தினர்.