செய்தியாளர்: செ.சுபாஷ்
மதுரை திருப்பரங்குன்றம் கோயில் அருகே உள்ள தென்கால் கண்மாய் கரையில் 800 மீட்டர் தொலைவிற்கு 44 கோடி ரூபாய் செலவில் நெடுஞ்சாலைப் பணிகள், கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்று வருகின்றன. கரையை உயர்த்தி வலுப்படுத்துவதற்காக, தென்கால் கண்மாயிலிருந்து மணல் அள்ளப்பட்டு பணிகள் நடந்தன. ஆனால், கண்மாயிலிருந்து அள்ளப்படும் மணல், தனியாருக்கு விற்கப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து நீர்வளத்துறையினர் ரகசிய ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், கண்மாயிலிருந்து மணல் அள்ளுவதற்கு எந்வொரு அனுமதியும் இல்லாமல், மணல் அள்ளப்பட்டு லாரிகள் மூலமாக எடுத்து செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கண்மாயிலிருந்து மணல் அள்ளிச் சென்ற லாரிகளை மடக்கிப்பிடித்த நீர்வளத் துறையினர், ஓட்டுநர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து திருநகர் காவல் நிலையத்தில், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர், ஒப்பந்ததாரர் உள்ளிட்டோர் மீது நீர்வளத்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர்.
இதற்கு காவல்துறையினரும் சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்வதாக கூறியுள்ளனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் 250க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் கடத்தப்பட்டதாக நீர்வளத்துறை அதிகாரிகள் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு வெளியே நெடுஞ்சாலைத் துறையினர், “எங்களது பெயரை குறிப்பிட்டு புகார் அளித்தது ஏன்?” என கேட்டு நீர்வளத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.