மிக மோசமான கட்டத்தை தாண்டியிருப்பதாக 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. புதுவையிலிருந்து கிழக்குத் திசையில் 170 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாக கூறப்படும் இது, சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வெதர்மேன் பிரதீப் ஜான் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து சமூகவலைதளத்தில் தெரிவிக்கையில், “மிக மோசமான கட்டத்தை நாம் தாண்டிவிட்டோம். இனி விட்டு விட்டு சென்னையில் ஆங்காங்கே லேசான மழை பொழியும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட சென்னை - ஶ்ரீஹரிகோட்டாவை கடக்கும் வரையில், காற்று அதிகமாக வீசும்.
இன்றைய மழை நிலவரத்தைப் பொறுத்தவரை இடைவெளி விட்டுவிட்டு பெய்யும். மக்கள் ரிலாக்ஸாக இருக்கலாம். மிக முக்கியமான கட்டத்தை தாண்டிவிட்டோம். கரையை கடக்கும் போது காற்று 40 கிமீ வேகத்தில் வீசும்.
நேற்று பெய்த கனமழையில், சராசரியாக 150 மி.மி. வரை சென்னையின் அனைத்து பகுதிகளிலும் பெய்துள்ளது. சில இடங்களில் 200 மி.மி.-ஐ கடந்துள்ளது. அதிகபட்சமாக, தாம்பரம் (233 மி.மி.); சோழவரம் (220 மிமி); எண்ணூர் (207 மிமி) ஆகிய இடங்களில் மழை பதிவாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி பூண்டி ஏரி 76% புழல் ஏரி 87%; சோழவரம் ஏரி 83%; செம்பரம்பாக்கம் ஏரி 75% நிரம்பியுள்ளன" எனக்குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி: விடிய விடிய கனமழை: சென்னையில் 11 சுரங்கப் பாதைகள் மூடல் - எங்கெங்கு போக்குவரத்துக்கு தடை?