ஒசூர் அருகே ஹோட்டலில் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தவர்களுக்கு புழு பிரியாணி வந்ததாக புகார் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி - ஒசூர் தேசிய நெடுஞ்சாலை சின்னார் என்னுமிடத்தில் அமைந்துள்ளது ஸ்டார் பிரியாணி ஹோட்டல். பிரபலமான இந்த ஹோட்டலில் தினந்தோறும் 800 முதல் 1000 பேர் வரை சாப்பிட்டு செல்லும் அளவிற்கு பிசியான கடை. இந்நிலையில் இந்த கடைக்கு வந்த காவேரிப்பட்டிணத்தைச் சேர்ந்த மூர்த்தி, அருண், இராமச்சந்திரன், அருள் ஆகிய 5 பேர் இந்த ஹோட்டலில் 4 சிக்கன் பிரியாணியினை ஆர்டர் செய்துள்ளனர். ஆர்டர் செய்தது என்னமோ சிக்கன் பிரியாணி தான். ஆனால் சர்வர் கொண்டுவந்து கொடுத்தபோது, அந்த பிரியாணியில் பெரிய சைஸில் புழு ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக கூறுகின்றனர்.
இது தொடர்பாக ஹோட்டல் நிர்வாகத்திடம் முறையிட்டபோது, 'அது வந்து கத்திரிக்காய்ல இருந்து வந்துருக்கலாம்' என அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த அவர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக பெங்களூருவில் உள்ள மேலாளருக்கு ஹோட்டல் ஊழியர்கள் போன் செய்து கொடுக்க, எதிர்திசையில் பேசிய மேனேஜர், 'பிரியாணியில் புழு இருந்ததெல்லாம் ஒரு புகாரா?.. சாப்பிட்டு கெளம்புங்க' என அதிகாரமாக கூறியதாக புகார் கூறுகின்றனர்.
இதுக்குறித்து ஹோட்டலில் சாப்பிட்டவர்கள் தெரிவிக்கையில், ''பிரபலமான ஹோட்டல் என்பதால் பலரும் நம்பி சாப்பிட வருகின்றனர். அவர்களின் உடலுக்கு ஊறுவிளைக்கும் உணவை கொடுப்பது மட்டுமல்லாமல், திருத்திக்கொள்ள முயற்சிக்காமல் அலட்சியம் காட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஹோட்டல் தரப்பில் விசாரித்த போது, அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை.