தமிழ்நாடு

‘உள்ளூர் மற்றும் உலகச் சுற்றுலா மெகா ஆஃபர்’ - பணத்தை சுருட்டிய தம்பதி கைது

‘உள்ளூர் மற்றும் உலகச் சுற்றுலா மெகா ஆஃபர்’ - பணத்தை சுருட்டிய தம்பதி கைது

webteam

கோவையில் உள்ளூர் முதல் உலகச் சுற்றுலா வரையில் ஆஃபரில் அழைத்துச் செல்வதாக பணத்தை சுருட்டிய தம்பதியை போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதியில் தனியார் சுற்றுலா மற்றும் டிராவல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை சுரேஷ்குமார் மற்றும் அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோர் நடத்தி வந்தனர். இந்நிறுவனம் சுற்றுலா திட்டங்கள் மூலம் சீரடி, கோவா, மும்பை, அந்தமான் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற பல வெளிநாடுகளுக்கும் செல்வதற்காக சலுகை கட்டணங்களை அறிவித்தது. குறிப்பாக பயணத்திற்கு சில மாதம் முன்பாக டிக்கெட் புக் செய்தால் அவர்களுக்கு நிறைய சலுகைகள் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  

ஏராளமானோர் உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா செல்வதற்காக டிக்கெட் புக் செய்திருந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி திடீரென நிறுவனம் மூடப்பட்டது. நிறுவன உரிமையாளர்கள் சுரேஷ்குமார் மற்றும் அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோர் தலைமறைவாகினர். இதனால் நிறுவனத்தில் பணம் கட்டி டிக்கெட் புக் செய்திருந்த 600க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மொத்தம் 10 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக சுரேஷ்குமார் மற்றும் மகேஸ்வரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, காவல் துறையினர் தேடி வந்தனர்.

அத்துடன் இருவரும் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க கோவை மாநகர காவல்துறை சார்பில் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் தலைமறைவாக இருந்த இருவரையும் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய தனிப்படையினர், அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.