தமிழ்நாடு

புத்தகங்களுடன் செல்ஃபி எடுத்த இளம் தலைமுறையினர்..!

புத்தகங்களுடன் செல்ஃபி எடுத்த இளம் தலைமுறையினர்..!

Rasus

உலக புத்தக தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், பலரும் புத்தகங்களுடன் எடுத்த புகைப்படத்தை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டனர்.

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 23-ஆம் தேதி உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக மக்கள் அனைவரிடத்திலும் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கவும், வாசிப்பின் ஆனந்தத்தை அனைவரும் உணர வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

புத்தகங்களே ஒரு மனிதனை சிந்திக்கும் தன்மையுள்ளவனாகவும், பகுத்தறிவுமிக்கவனாகவும் மாற்றுகிறது. மிகப்பெரிய தலைவர்களில் பலரும் கூட எவ்வளவு பெரிய வேலைப்பளுக்கு இடையிலும், தினசரி அரைமணி நேரமாவது புத்தங்களை வாசிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆனால் இன்றைய இளைஞர்கள் பெரிய அளவில் புத்தக வாசிப்பில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. அப்படி வாசிக்கும் ஆர்வம் கொண்டவர்கள் கூட, டிஜிட்டலில் அதனை படிப்பதாகவும், புத்தங்களை பக்கம் புரட்டி வாசிக்கும்போது ஏற்படும் ஆனந்தம் அதில் ஏற்படுவதில்லை என்று புகார் உள்ளது.

இந்நிலையில் உலக புத்தக தினமான நேற்று ஏராளமான இளைஞர்கள், தாங்கள் புத்தங்களுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு, வாசிப்பின் மீதான தங்கள் ஈர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். எழுத்தாளரும், விழுப்புரம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளருமான ரவிக்குமார், “பொது நூலகம் ஒன்றுக்குச் செல்லுங்கள். அங்கிருந்து ஒரு செல்ஃபி எடுத்து இங்கே பின்னூட்டமாகப் போடுங்கள். ஒரு புத்தகத்தைப் பரிசாகப் பெறுங்கள்” என நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அவரின் பின்னூட்டத்தில் ஏராளமானோர் தாங்கள் புத்தகம் படிக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தனர். ஆன்லைன் கேம்ஸ், மொபைல் என ஏராளமான வசதிகள் இருக்கும் இக்காலத்திலும் புத்தக ப்ரியர்களாக பலர் இருப்பது நேற்று வெளிப்படையாகவே தெரியவந்தது. ஒரு பண்பட்ட சமூகம் உருவாக புத்தகங்களே மிகப்பெரிய சாட்சியாக இருக்கின்றன. அந்தவகையில் இன்றைய இளைஞர்களும் புத்தகத்தின் மீது தனிக்காதல் வைத்திருப்பது ஒரு நல்ல போக்கையே காட்டும் வகையில் உள்ளது.