தமிழ்நாடு

செல்போனை பறித்த சிறார் திருடர்கள் : ஒரு கி.மீ விரட்டிப்பிடித்த ‘சிங்கப்பெண்’

செல்போனை பறித்த சிறார் திருடர்கள் : ஒரு கி.மீ விரட்டிப்பிடித்த ‘சிங்கப்பெண்’

webteam

தனது செல்போனை பறித்த திருடர்களை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆட்டோவில் விரட்டிச் சென்று பிடித்த பெண்ணை சென்னை காவல் ஆணையர் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்த பெண் கீதபிரியா (28). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை தனது நிறுவன வாகனத்திற்காக அசோக் நகர் பகுதி சாலையில் காத்திருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள், கீதபிரியாவின் கையில் இருந்த செல்போனை பறித்துச்சென்றனர். சத்தம்போட்டு கூச்சலிட்ட கீதபிரியா, உடனே பின்னால் வந்த ஆட்டோவில் ஏறிக்கொண்டு திருடர்கள் சென்ற இருசக்கர வாகனத்தை துரத்திச்சென்றார்.

ஆட்டோவில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று திருடர்களை மடக்கினார். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த நபர் தப்பி ஓட, வாகனத்தை ஓட்டிய நபரை ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அங்கிருந்த மக்கள் உதவியுடன் பிடித்து காவல்நிலையத்தில் கீதபிரியா ஒப்படைத்தார். அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த இருசக்கர வாகனம் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், தப்பிச்சென்ற நபரை வரவழைத்து அவரிடம் இருந்த செல்போனையும் பறிமுதல் செய்து கீதபிரியாவிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது ராமபுரத்தை சேர்ந்த 17 மற்றும் 16 வயதுடைய சிறார்கள் எனத் தெரியவந்தது. இந்நிலையில் திருடர்களை துணிச்சலுடன் பிடித்த கீதபிரியாவை சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.