தமிழ்நாடு

ஆட்டோ தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம்

ஆட்டோ தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம்

நிவேதா ஜெகராஜா
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, CITU ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆட்டோ தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வலியுறுத்தியும், பெட்ரோல் - டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்து, அதன் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகிறது.
தமிழகத்தில் நலவாரியங்களை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி உருவாக்கியபோது,  ஆட்டோ தொழிலாளர்களுக்கு என தனி நலவாரியம் ஏற்படுத்தினார். தற்போது அது அமைப்புசாரா ஒட்டுநர் நலவாரியம் என தன்னிச்சையாக பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஆட்டோ தொழிலாளர்கள் பெயரே இல்லாமல் செயல்படுவதென்பது ஆட்டோ தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கருணாநிதி உருவாக்கிய ஆட்டோ தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்டு 17-ல் ஆர்ப்பாட்டம் நடத்துவது என CITU சம்மேளனக் குழுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் கொரானா பரவல், பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் போன்றவற்றால் ஆட்டோ தொழில் முற்றாக முடங்கியுள்ளதாக கூறப்பட்டது.
எனவே "ஆட்டோ தொழிலாளர்களை பாதுகாக்க தமிழக அரசானது நிவாரணமாக ₹7500 வழங்க வேண்டும். இன்றைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, மாவட்ட தன்மைக்கு ஏற்ப மீட்டர் கட்டணம் அறிவிக்க வேண்டும். டீசல், பெட்ரோல் விலைகளை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்து டீசல், பெட்ரோல் விலையை கட்டுபடுத்த வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானிய விலையில் டீசல், பெட்ரோல் வழங்கவேண்டும். கொரோனாவில் இறந்த ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்திற்கு நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலையும் வழங்க வேண்டும்.
ஒன்றிய அரசின் மோட்டார் வாகனச் சட்ட திருத்தத்தை தமிழகத்தில் அமலாக்கக் கூடாது. ஆட்டோ தொழிலாளர்கள் மீது காவல்துறையின் அடக்கமுறைகள் தடுத்து நிறுத்த வேண்டும். திருச்சி மாநகரத்தில் மீட்டர் ஆட்டோ என்ற பெயரில் சில தனிநபர்கள் ஆன்லைன் டிஜிட்டல் மீட்டரை பெற்று தன் இஷ்டத்திற்கு கட்டணத்தை தீர்மானிந்து வருகிறார்கள். மீட்டர் கட்டணம் என்பதை அரசாங்கம் தான் தீர்மானிக்க வேண்டும். 
மூன்று மாதத்திற்கு ஒரு முறை கட்டணத்தை மாற்றி அமைக்கவேண்டும். சட்ட விரோதமாக இயங்கும் மீட்டர் ஆட்டோ நிறுவனங்கள் மீதும் ஓலா,  ரபீட்டோ பைக்,  டாக்ஸி இரண்டு சக்கர வாகனத்தில் பயணிகளை ஏற்றுவதால் ஆட்டோ தொழில் பாதிக்கப்படுகிறது. இவற்றை சட்டரீதியான நடவடிக்கைகள் மூலம் தடுக்க வேண்டும். ஆட்டோ ஓட்டுனர்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.