தமிழ்நாடு

பாத்திரங்கள், படுக்கைகளுடன் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் தொழிலாளர்கள் தர்ணா! ஏன்?

பாத்திரங்கள், படுக்கைகளுடன் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் தொழிலாளர்கள் தர்ணா! ஏன்?

webteam

"வயதை காரணம் காட்டி பணி நிறுத்தம் செய்யக்கூடாது. தமிழக வேளாண்மை துறை தனது அந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்” என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அரசு அண்ணா பண்ணையில் கடந்த 30 ஆண்டுகளாக தினக்கூலிகளாக பணியாற்றி வந்த 40 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை, கடந்த ஒரு வார காலமாக திடீரென வேளாண் துறை அதிகாரிகள் வயதை காரணம் காட்டி பணி நிறுத்தம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்ததாக கூறும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கடந்த 16 ஆம் தேதி  குடுமியான்மலை அரசு வேளாண் பண்ணையில் உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நாமும் களத்திற்கு சென்று அந்த தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து புதிய தலைமுறையில் செய்தியாக வெளியிட்டு இருந்தோம். அதன் விளைவாக, அத்தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு வர வேளாண் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் அதன் பின்பு இரண்டு நாட்கள் மட்டுமே பணி வழங்கப்பட்டதாகவும், மீண்டும் வயதைக் காரணம் காட்டி பணிக்கு வர வேண்டாம் என தொழிலாளர்களுக்கு வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

இக்குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து, இன்று 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகளோடு சமையல் பாத்திரங்கள், பாய் தலையணை உள்ளிட்ட பொருட்களை தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக சென்று, வேளாண் துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தர்ணாவின்போது தொழிலாளிகள், வேளாண்துறை அதிகாரிகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் நம்மிடையே கூறுகையில், “30 ஆண்டுகளுக்கு மேலாக இதே அரசுப்பண்ணையில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வந்தோம். இப்போது திடீரென வேலையை விட்டு அனுப்புகின்றனர். தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு, எங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு போராட்டம் செய்ததால், எங்களுக்கு பணி வழங்கப்பட்டது.

ஆனால், அதன் கடந்த இரண்டு நாட்களாக பணிக்கு வர வேண்டாம் என அதிகாரிகள் மீண்டும் மன உலைச்சலுக்கு உள்ளாக்குகின்றனர். இதனால் தொழிலாளர்களாகிய நாங்கள் பெரும் மன சுமைக்கு உள்ளாகியிருக்கிறோம். எந்தவித முன்னறிவிப்புமின்றி, திடீரென பணி நிறுத்தம் செய்தது கண்டிக்கத்தக்கது. அனைத்து தொழிலாளர்களையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்வதோடு, பணி பாதுகாப்பு செய்துகொடுத்து, பணி ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளையும் வழங்க வேண்டும்” என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக குடுமியான்மலை அரசு அண்ணா பண்ணை வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு அவர்கள் தங்களது உடைமைகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வேளாண் துறை உதவி இயக்குனர் பழனியப்பன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் பணி வழங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என கூறி தொடர்ந்து 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து நாம் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் பெரியசாமியிடம் கேட்டபோது, “60 வயதிற்கு மேற்பட்ட பணியாளர்களுக்கு பணி வழங்க வேண்டாம் என வேளாண் துறை இயக்குனர் அறிவுறுத்தியதன் அடிப்படையில்தான், புதுக்கோட்டை மாவட்டத்திலும் 60 வயதிற்கு மேற்பட்ட பணியாளர்களுக்கு பணி வழங்கப்படவில்லை.  வேளாண் துறை இயக்குனர் அறிவுறுத்தினால், மீண்டும் அனைத்து பணியாளர்களுக்கும் பணி வழங்க தயாராக இருக்கிறோம்” என தெரிவித்தார்.