செய்தியாளர்: காமராஜ்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வரும் அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த மாநாட்டிற்காக விழுப்புரம் மாவட்ட காவல் துறையிடம் அனுமதி கேட்டும், பாதுகாப்பு வழங்க கோரியும் எஸ் பி அலுவலகத்தில் ஏடிஎஸ்பி திருமாலிடம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், கட்சி நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் சென்று மனு அளித்திருந்தார்.
காவல்துறையும் 33 நிபந்தனைகளோடு அனுமதி வழங்கியது. இருப்பினும் அனுமதி கடிதத்தில் மாநாடு தேதி அக். 23 என்று குறிப்பிடப்பட்டது. பின் கட்சித்தலைவர் விஜய், அக். 27 மாநாடு என அறிவித்தார். இதனால் அந்த தேதிக்கு அனுமதி கொடுக்கும்படி தவெக-வினர் மனு கொடுத்து, அனுமதிக்காக காத்திருக்கின்றனர். அது கிடைத்துவிடும் என்றே கூறப்படுகிறது.
இந்நிலையில்,
மாநாடு நடைபெறும் நாளன்று தீயனைப்பு வாகனத்தை மாநாட்டு பந்தலில் பாதுகாப்பிற்கு நிறுத்துவற்காக விக்கிரவாண்டி தீயனைப்பு நிலையத்திலும்,
ஆம்புலன்ஸ் நிறுத்த முண்டியம்பாக்கம் மருத்துவமனையிலும்,
சாலைகள் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகம் மற்றும் ரயில்வே நிர்வாகத்திடமும்
மனு அளிக்கப்பட்டுள்ளன.
மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்சி நிர்வாகிகள் தயார் செய்து வருவதால் காவல் துறையினர் அனுமதி கொடுத்தவுடன் மாநாடு நடைபெறும் இடத்தில் மேடை அமைக்கும் பணி நடைபெறும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.