தமிழ்நாடு

“15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் இல்லை” - காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்

“15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் இல்லை” - காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்

webteam

விருதுநகர் அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ஜோதிபுரம் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நகராட்சி மூலம் தாமிரபரணி குடிநீர் 5 நாள்களுக்கு ஒருமுறை வாகனங்கள் மூலம் வழங்கப்பட்டது வந்தது. ஆனால் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை எனவும் இதனால் குடிதண்ணீர் இல்லாமல் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

இதுகுறித்து பலமுறை  நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் சொக்கலிங்கபுரத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்து வந்த அருப்புகோட்டை நகர்காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை வார்த்தை நடத்தினர். போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.