பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதுகாப்பான நகரமாக சென்னை முதலிடம் பிடித்துள்ளது.
பெண்கள் பாதுகாப்பாக உள்ள நகரங்களின் பட்டியலை மத்திய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. டெல்லியை பொறுத்தவரை 75 லட்சம் பெண்கள் உள்ள நிலையில், அவர்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டது தொடர்பாக 13,803 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு லட்சம் பெண்களில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற கணக்காக இது அமைகிறது. இந்தப்பட்டியில் மும்பை இரண்டாவது இடத்திலும், கொல்கத்தா மூன்றாவது இடத்திலும் உள்ளன. இதில் கொல்கத்தாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களாக பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் ஒருவர் கூட குற்றவாளி என அறிவிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து லக்னோ நான்காவது இடத்திலும் பெங்களூரு 5ஆவது இடத்திலும் உள்ளன.
ஆனால் சுமார் 43 லட்சம் பெண்கள் வசிக்கும் சென்னையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக 544 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இது ஒரு லட்சம் பெண்களில் 12 பேர் பாதிக்கப்படுகின்றனர் என்ற கணக்கில் உள்ளது. 544 வழக்குகளில் 401 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 153 வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக சென்னையில் 578 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 506 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் சென்னை மாநகரில் 189 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் மத்திய குற்ற ஆவணக் காப்பகம் அறிவித்துள்ளது.