தாராபுரத்தில் ஊரடங்கு காரணத்தால் வேலை இழந்து தவித்து வரும் பெண்களிடத்தில் கட்டாய கடன் வசூலில் ஈடுபடுவதாக கூறி தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு ஏராளமான பெண்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 20க்கும் மேற்பட்ட தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய நிறுவனங்கள் ஏழை மற்றும் சிறு குறு தொழில் செய்யும் பெண்களை வீடு தேடிச் சென்று அவர்களில் 12 பேர் கொண்ட குழுக்களை அமைத்து அவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வசூலித்து வருகின்றனர்.
இந்நிலையில் தாராபுரத்ம் ஜின்னா மைதானம் பகுதியில் வசிக்கும் 5-வது மட்டும் 6-வது வார்டு பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் கொட்டாப்புளி பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஐ.டி.எப்.சி மற்றும் கிராம விடியல், இசாப் என்ற தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தாராபுரத்தில் இருந்து பைபாஸ் சாலைக்கு செல்லும் போக்குவரத்துகள் ஒரு மணி நேரமாக ஸ்தம்பித்து நின்றன.
இதுகுறித்து பெண்கள் கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் தங்களது தொழில் முற்றிலுமாக முடங்கி கடந்த 5 மாதங்களாக தொழில், வருவாய் அனைத்தையும் இழந்து வறுமையில் வாடி வருகிறோம். இந்நிலையில் ஐடிஎப்சி, வெஸ்டர் கிராம விடியல், இசாப் உள்ளிட்ட தனியார் நிதி நிறுவனங்கள் நாங்கள் பெற்ற கடனை வட்டியுடன் சேர்த்து உடனே கட்ட வேண்டும் எனக் கூறி பெண்களிடத்தில் தகாத வார்த்தை பேசி கட்டாயப் படுத்துகின்றன. கடனை கட்டத் தவறினால் வேறு எந்த வங்கியிலும் எதற்காகவும் கடன்பெற முடியாதவாறு பிளாக் செய்து விடுவோம் எனக்கூறி மிரட்டுகின்றனர்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் அரசால் தளர்வு செய்யப்படும் வரை எங்களிடம் கடன் தொகையை வசூலிக்க வரக்கூடாது. கூடுதல் வட்டி எதுவும் கேட்க கூடாது. தங்களுக்கு மேலும் 2 மாத கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.