குமாரபாளையத்தில் காவிரியாற்று வெள்ளப்பெருக்கால் பாதித்த குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்க வந்த, அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முற்றுகையிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்து பெண்கள் கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீரால், ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு காவிரி கரையோரம் வசிக்கும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த கலைமகள் வீதி, மணிமேகலை வீதி, இந்திரா நகர் மற்றும் குறுங்காடு கலைவாணி நகர் உள்ளிட்ட பல்வேறுப் பகுதிகளில் வசிக்கும் சுமார் 340 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் இன்று உணவு, அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்க அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வந்திருந்தார். குமாரபாளையம் நகராட்சி திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும், ஈரோடு மாவட்டம் பவானி செல்வதற்காக காரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது வழியில் அவரது காரை முற்றுகையிட்ட பெண்கள், தற்போது சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாகவும், மளிகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மிக உயர்ந்துள்ளதாகவும், இதனைக் குறைக்க உடனடியாக மத்திய அரசிடம் கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினர்.