உயிருடன் இருக்கும் நிலையில் இறந்து விட்டதாகக் கூறி ரேஷன் கார்டில் பெயர் நீக்கி விட்டதாக கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் அளித்த புகார் மனுவால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த பொன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அம்சவள்ளி. இவருடைய கணவர் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு உயிரிழந்த நிலையில், இவரது மகன் மற்றும் இவருடைய பெயர் குடும்ப அட்டையில் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நியாய விலைக் கடையில் பொருள் வாங்க சென்றபோது, அம்சவள்ளியின் பெயர் குடும்ப அட்டையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அம்சவள்ளி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது அம்சவள்ளியின் பெயர் இறந்தோரின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உயிருடன் இருக்கும் அம்சவள்ளியை இறந்தவர்களின் பட்டியலில் சேர்த்துள்ளதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏற்கெனவே கணவர் இறந்த நிலையில், தன்னுடைய மகனும் குடிக்கு அடிமையானதால் நியாய விலை கடைக்கு கைரேகை வைக்க கூட வருவதில்லை என்றும், வாழ்வாதாரத்திற்கு வேறு வழியில்லாத நிலையில், தன்னை இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்து விட்டதால் ரேஷன் கடையில் கிடைக்கும் பொருட்களும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கும் அம்சவள்ளி, இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து மனு அளித்தார்.
மனுவைப் பெற்றுக் கொண்ட திருச்சி மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து, அம்சவள்ளியின் பெயரை இறந்தவர்களின் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார். உயிருடன் இருக்கும் ஒருவரை இறந்தவர்களின் பட்டியலில் சேர்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: எம்.ஜி.ஆர். முதல் ஓபிஎஸ் வரை... அதிமுக இதுவரை சந்தித்த பொதுச்செயலாளர்கள் 'ஃப்ளாஷ்பேக்'!