தமிழ்நாடு

ரூ.10 லட்ச ரூபாயை பறித்த பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

ரூ.10 லட்ச ரூபாயை பறித்த பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

PT WEB

மதுரை மாவட்டத்தில் பத்து லட்ச ரூபாயை பறித்த குற்றச்சாட்டில் பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த அர்ஷத் என்பவர், கடந்த 5-ம் தேதி தனது தொழிலுக்குத் தேவையான பத்து லட்ச ரூபாயோடு தேனிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, தேனியிலிருந்த அவரது சகோதரர் கூடுதலாக ஐந்து லட்ச ரூபாய் தேவை எனவும், அதனை பாண்டி என்பவரிடமிருந்து வட்டிக்கு வாங்கி வருமாறும் கூறியுள்ளார். இதையடுத்து, அர்ஷத்தை சந்தித்த பாண்டி, அவரது நண்பர் கார்த்திக் ஆகியோர், உக்கிரபாண்டி என்பவர் பணத்தை கொடுப்பதற்கான ஆவணங்களை எடுத்து வருவதாகவும், அதுவரை காத்திருப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில், திடீரென அங்கு வந்த நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி, மூவரையும் காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றியுள்ளார். உடனடியாக அர்ஷத் வைத்திருந்த பத்து லட்ச ரூபாய் பணத்தை பறித்த கார்த்திக், அதனை காவல் ஆய்வாளரின் ஓட்டுநரிடம் கொடுத்துள்ளார்.

பின்னர், அவர்கள் பாதி வழியிலேயே அர்ஷத்தை இறக்கி விட்டுள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அர்ஷத், மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் வசந்தி உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காவல் ஆய்வாளர் வசந்தி மீதான குற்றச்சாட்டு உறுதியானதால், அவரை பணியிடை நீக்கம் செய்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.