Money fraud complaint pt desk
தமிழ்நாடு

GMR செயலி மூலம் நூதன மோசடி – லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததாக பெண்கள் புகார்

ஜிஎம்ஆர் செயலி மூலம் பணத்தை முதலீடு செய்ய வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

webteam

செய்தியாளர்: பிரவீண்

ஜிஎம்ஆர் (GMR) எனும் செயலியில் தினமும் 10 நிமிடம் வேலை செய்தால் வாரம்தோறும் சம்பளம் வரும் எனவும் அதற்கு முதலீடு செய்ய வேண்டுமென கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த முபசீரா என்ற பெண் விளம்பரப்படுத்தியதாக தெரிகிறது.

இதனை நம்பி பலரும் 15 ஆயிரம் முதல் 3.5 லட்சம் வரை பணத்தை முதலீடு செய்துள்ளனர். அதில், வாரம்தோறும் தொகைக்கு தகுந்தவாறு பணம் முதலீடு செய்தவர்களின் வங்கிக் கணக்கிற்கு பணம் வருவதாக கூறியுள்ளனர்.

Money fraud complaint

இதனையறிந்த மக்கள் பலரும் இந்த செயலியில் முதலீடு செய்து வேலை பார்த்து வந்துள்ளனர். ஆனால் கடைசி வரை எந்த சம்பளமும் வராததை அறிந்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து ஏமாற்றம் அடைந்த கோவையை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில்... இந்த ஜி.எம்.ஆர் ஆப் மூலம் தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை முதலீடு செய்ய வைத்து கோடிக்கணக்கில் ஏமாற்றியுள்ளதாகவும் அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்பப் பெற்று தருமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.