தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் : டிஜிபிக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் : டிஜிபிக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

webteam

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை கொடூரம் தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகியுள்ளனர். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் அரசியல் கட்சிகள் போராட்டங்களை அறிவித்து வருகின்றன. தமிழகமெங்கும் கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணையை தொடங்கியுள்ளனர். ஐ.ஜி. ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை தேவை என தமிழக டிஜிபிக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ‘இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் மற்றும் தகவல் பரவி கொண்டிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக என்ன விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. எந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை யார் நடத்துகின்றனர். வழக்கின் நிலைமை என்ன என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. 

குற்றவாளிகளுக்கு எதிராக குரல்கள் வலுத்து வரும் நிலையில், தற்போது மகளிர் ஆணையத்தின் நோட்டீஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.