தமிழ்நாடு

மந்திரவாதி பேச்சை கேட்டு வீட்டிற்குள் 21 அடி ஆழ பள்ளம் தோண்டிய பெண்!

webteam

சென்னையில் செய்வினையை எடுப்பதாகக் கூறி வீட்டிற்குள் 21 அடி ஆழ குழி தோண்டிய ஓய்வு பெற்ற தலைமைக் காவலருடைய மனைவியின் செயலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை கீழ்பாக்கத்தை அடுத்த டி.பி.சத்திரத்தைச் சேர்ந்தவர் மைதிலி. இவரது கணவர் ஓய்வு பெற்ற தலைமைக் காவலர். இவர்களது வீட்டு வாசலில் மூட்டை மூட்டையாக மண் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும், குடிசை வீட்டிற்குள் குழி தோண்டும் சத்தம் கேட்பதாகவும் அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர். நிகழ்விடத்திற்குச் சென்று சோதனையிட்ட போது காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மைதிலியின் செயல்.

சிறிய குடிசை வீட்டிற்குள் 21 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டியிருந்தார் மைதிலி. குழி தோண்டப்பட்டதற்கு மைதிலி கூறிய காரணம் காவல்துறையினரை திகைக்க வைத்தது. தனது குடும்பத்தில் பல நாள்களாகவே பிரச்னைகள் இருப்பதாகவும், அதற்கு காரணம் வீட்டிற்குள் செய்வினை வைத்திருப்பதுதான் எனவும் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மந்திரவாதி சுரேஷ் கூறியதாக தெரிவித்துள்ளார் மைதிலி. மேலும் வீட்டிற்குள் தோண்டிய குழியில் இருந்து மாந்திரீக பொம்மைகள் மற்றும் சில கயிறுகளை எடுத்து அழித்ததாகவும் கூறி திகிலை கிளப்பியுள்ளார் அவர்.

இந்த விவகாரம் தொடர்பாக அமைந்தகரை தாசில்தாருக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்குச் சென்ற தாசில்தார் தலைமையிலான வருவாய்த்துறையினர் மைதிலியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அவரை எச்சரித்து அனுப்பினர். இதற்கிடையில் மந்திரவாதி சுரேஷை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யுமாறும், மறு உத்தரவு வரும்வரை அவரை காவல் நிலையத்திலிருந்து வெளியே விடக்கூடாது எனவும் வருவாய்த்துறையினர் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்துள்ளனர். மேலும் மைதிலியின் வீட்டில் அதிக ஆழத்தில் குழி தோண்டப்பட்டுள்ளதால் அருகில் வசிப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால், உடனடியாக வீட்டில் உள்ள பாதாள குழியில் மண்ணைப் போட்டு மூடுமாறும் வருவாய்த்துறையினர் எச்சரித்துள்ளனர்.