தமிழ்நாடு

காஞ்சி: காப்பர்-டி அகற்றிய பெண்ணிற்கு அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்?

காஞ்சி: காப்பர்-டி அகற்றிய பெண்ணிற்கு அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்?

webteam

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் இரண்டு வாரத்திற்கு முன்பு காப்பர்-டி யை அகற்றிய பெண்ணுக்கு மருத்துவரின் அலட்சியத்தால் விபரீதம் நடந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கட்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சசிதரன் - கன்னிகா தம்பதியர். இவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் கன்னிகா கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் கருத்தடைச் சாதனம் காப்பர்-டி பொருத்தியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 26 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் மஞ்சுளா என்பவரால் காப்பர்-டி அகற்றப்பட்டது. இதையடுத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு நேற்று வரை கன்னிகா கடினமான வயிற்று வலியில் துடித்து வந்துள்ளார். அது மட்டுமல்லாமல் சாப்பிட முடியாமலும் நெஞ்சு வலி சிறுநீர் கழிக்கும் இடத்தில் எரிச்சல் போன்ற பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதைத் தொடர்ந்து நேற்று ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு வந்த கன்னிகா பணியில் இருந்த மருத்துவ பணியாளரிடம் நடந்ததை கூறியுள்ளார்.

இதையடுத்து பிரசவ அறைக்கு அழைத்துச் சென்ற மருத்துவ ஊழியர் கையில் க்ளவுஸ் அணிந்தபடி தன்னை பரிசோதிப்பது போல் நடித்ததாக கூறப்படுகிறது. ஆனால், பரிசோதிக்காமலேயே திங்கட்கிழமை வரச் சொல்லி அனுப்பி வைத்துள்ளார். இதனால் மனமுடைந்த கன்னிகா மீண்டும் வேதனையில் துடித்துள்ளார். இந்நிலையில், இன்று காலை கன்னிகா சிறுநீர் கழிக்கும்போது எலுமிச்சம் பழம் அளவிலான மருத்துவமனையில் பயன்படுத்தும் காட்டன் துணி கீழே வந்து விழுந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ந்து போன கன்னிகா மற்றும் உறவினர்கள் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று இதுகுறித்து மருத்துவ ஊழியரிடம் கூறியுள்ளனர்.

ஆனால், மருத்துவர் மற்றும் ஊழியர் பரிசோதனை செய்யாமலும், சரியான பதில் அளிக்காமலும் அலட்சியமாக பேசியுள்ளனர். இதனால் வேதனையடைந்த கன்னிகா மற்றும் அவரது குடும்பத்தினர் 3 மணி நேரத்திற்கு மேலாக மருத்துவ வளாகத்தில் காத்திருந்தனர். இதுவரை தலைமை மருத்துவர் கைலாஷ் மருத்துவமனைக்கு வராதது பெரும் வேதனை அளிக்கக் கூடிய செயலாக உள்ளது. தலைமை மருத்துவர் கைலாஷ் சொந்தமாக கிளினிக் வைத்திருப்பதால் அரசு மருத்துவமனையில் நடக்கின்ற அவலங்களை கண்டு கொள்வதில்லை என்றும் நோயாளிகளுக்கு சரிவர சிகிச்சை அளிப்பதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் பணி நேரத்தில் தலைமை மருத்துவர் கைலாஷ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் மருத்துவ உதவியாளர்களை சிகிச்சை அளிக்க வைப்பது பெரும் வேதனைக்குரிய விஷயம்.

இந்த விவகாரம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர்  கிருஷ்ணகுமாரியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பவம் நடந்தது குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றது தவறு யார் செய்தாலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இது சம்பந்தமாக அன்று பணியில் இருந்த மருத்துவர் செவிலியர் மற்றும் மருத்துவ ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ள இணை இயக்குனர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது மருத்துவ ஊழியர்கள் மட்டும் இன்றி பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது உறவினரிடம் பெறப்படும் கருத்துக்கள் முடிவில் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்...