சென்னை புதிய தலைமுறை
தமிழ்நாடு

சென்னையில் ஓடும் பேருந்தில் திடீரென ஓட்டை ஏற்பட்ட விவகாரம் - நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை மிண்ட் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று பேருந்தில் பயணித்த போது, பேருந்து தளத்தில் ஏற்பட்ட ஓட்டையால் தொங்கியபடி உயிர் தப்பிய சம்பவம் அரங்கேறியது.

ஜெனிட்டா ரோஸ்லின்

செய்தியாளர் : அனந்த ராமன்

சென்னை வள்ளலார் நகரில் இருந்து திருவேற்காட்டு செல்லும் தடம் எண் 59 என்ற மாநகர பேருந்து ஒன்று அமைந்தகரை ஸ்கை-வாக் வணிக வளாகம் அருகே சென்றுள்ளது. அப்போது பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் அடுத்த நிறுத்தத்தில் இறங்குவதற்காக எழுந்தபோது பேருந்து தளத்தின் பலகை திடீரென உடைந்தது.

இதனால் அதன்மீது கால் வைத்த அப்பெண் ஓட்டை வழியாக சாலைக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். சட்டென அலறிய அப்பெண் கீழே தொங்கியபடி கூச்சலிடவே சிறிது தூரத்திற்கு பிறகு பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது.

அதிர்ச்சியடைந்த பயணிகள் அப்பெண்னை மீட்டு அவருக்கு முதலுதவி வழங்கினர். மேலும் ஆத்திரமடைந்த பயணிகள் ‘சேதமடைந்த நிலையில் இருந்த பகுதியை கவனிக்காமல் ஏன் பேருந்தை எடுத்து வந்தீர்கள்?’ என மாநகர பேருந்து ஓட்டுநர், நடத்துனரை கேள்வி எழுப்பினர். காயமடைந்த பெண் சென்னை மின்ட் பகுதியைச் சேர்ந்த ஷாநா என்பது தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து மாநகர போக்குவரத்து ஊழியர்கள் காவல்துறைக்கு தெரிவிக்காமல் அங்கிருந்து பேருந்தினை எடுத்து சென்றதால் அமைந்தகரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போக்குவரத்து துறையின் அலட்சியத்தின் காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளதாக கூறி வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பலரிடையே இந்த சம்பவத்திற்கு எதிராக எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இதற்கு தன் கண்டனத்தினை பதிவு செய்துள்ளார்.

அதில் அவர், “ஆட்சிக்கு வந்தது முதலே எந்த ஒரு புதிய பேருந்துகளையும் வாங்காமல், தரமற்ற, பயன்பாட்டிற்கு தகுதியற்ற பேருந்துகளுக்கெல்லாம் பிங்க் நிற பெயிண்ட் பூசி ‘மகளிர் இலவசப் பேருந்து’ என்ற பெயரில் இயக்கி பயணிக்கும் பொதுமக்களின் உயிருக்கே ஆபத்தான நிலையினை உருவாக்கியிருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றுள்ளார்.

இனி பஸ் இலவசம் என்பதை தாண்டி , மக்களுக்கு மாவுகட்டும் இலவசம் என்று அறிவித்தாலும் ஆச்சரியமில்லை, மக்கள் இவர்கள் ஆட்சியில் உயிர்பிழைத்து வாழ்வதே மாபெரும் சாதனை என்ற நிலையிலே தான் இன்றைய விடியா திமுக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் இருக்கின்றன என்பதற்கு இம்மாதிரியான நிகழ்வுகள்தான் சாட்சி." போன்ற கருத்துகளை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.