செய்தியாளர் - செ.சுபாஷ்
கோயம்பத்தூர் மாவட்டம் ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் மனைவி, சாந்தி (49). இவர் கொங்குநாடு மருத்துவமனையில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். தனது கணவர் மற்றும் மகனுடன் கோவையில் வசித்து வந்த இவர், கடந்த திங்கள் கிழமையன்று கோயம்புத்தூரில் இருந்து தேனிக்கு விழா ஒன்றில் பங்கேற்பதற்காக கணவரோடு பைக்கில் சென்றுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி குய்யப்பன்நாயக்கன்பட்டி அருகே வாகனம் சென்றுகொண்டிருந்தபோது, சாலையில் இருந்த வேகத்தடையை கடந்துள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக பைக்கின் பின்னால் அமர்ந்த சாந்தி தவறி கீழே விழந்துள்ளார். இதில் நிகழ்விடத்திலேயே மயக்கமடைந்த சாந்தி, ஆம்புலன்ஸ் உதவியுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். சாந்திக்கு மூளைச்சாவு ஏற்படவே, சாந்தியின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளனர். இதனையடுத்து சாந்தியின் இதயம் மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு விமானம் மூலமாக கொண்டுசெல்லப்பட்டது.
மேலும், சாந்தியின் நுரையிரல் மதுரையிலுள்ள இன்னொரு தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இந்த இரு உறுப்புகளும், இருவரின் உயிரை காப்பாற்ற வழங்கப்பட்டது.
இறந்த பிறகும் இருவருக்கு வாழ்வளித்துள்ள சாந்தியை எண்ணி, அவரது குடும்பத்தினர் பெரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். சாந்தி இப்போதும் இந்த உலகில் வாழ்வதாகவும், சுவாசிப்பதாகவும் கூறி அவர்கள் நெகிழ்ந்தனர்.