தீபிகா pt desk
தமிழ்நாடு

அடியாட்களை அனுப்பி மிரட்டுவதாக தேவா மகள் மீது பெண் புகார் - போலீசார் விசாரணையில் வெளிவந்த உண்மை!

இசையமைப்பாளர் தேவாவின் மகள், அடியாட்களை கூட்டி வந்து தன்னை மிரட்டுவதாக அவரது வீட்டில் குடியிருக்கும் பெண் கதறி அழுதுபடி வீடியோ வெளியிட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெ.அன்பரசன்

வடபழனியில் இசையமைப்பாளர் தேவாவின் மகள் ஜெயபிரதாவுக்குச் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டை தீபிகா மற்றும் ஜெயக்குமாருக்கு வாடகை விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு வாடகைக்கு குடியிருக்கும் தீபிகா, திடீரென கதறி அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

viral video

அந்த வீடியோவில்ஈ தீபிகா தனது வீட்டில் கத்தியுடன் புகுந்த 7 நபர்கள் தன்னை மிரட்டிவிட்டு வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களை அடித்து உடைத்துவிட்டு தப்பி சென்றதாகவும், உயிர் பிழைத்ததே பெரிது எனவும் கதறியபடியே தெரிவித்துள்ளார். மேலும் 'எனக்கும் எனது கணவரின் உயிருக்கும் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அதற்கு காரணம் ஜெயபிரதா தான்' என தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக தீபிகா 100-க்கு கால் செய்து தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததும் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து வடபழனி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், ஜெயப்பிரதாவின் வீட்டிற்கு தீபிகா, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக வாடகைக்கு வந்ததாகவும், கடந்த ஒராண்டு காலமாக வாடகையை தராமல் இருந்து வந்துள்ளார். இது குறித்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் தேவாவின் மகள் ஜெயப்பிரதா, வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது முறையாக வாடகை செலுத்துவதாகக் கூறிய தீபிகா மீண்டும் வாடகை அளிக்காமல் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

Police station

மாதம் 25 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு குடியேறிய நிலையில், கடந்த ஓராண்டு காலமாக வாடகை தராமல் இருந்த தீபிகா, தனது ஹார்டுவேர்ஸ் கடை நஷ்டத்தில் இயங்கி வருவதால் தர இயலவில்லை என ஜெயப்பிரதாவிடம் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும், தற்போது தீபிகா வீடியோ வெளியிட்டு அதில், தன்னையும் தன் கணவரையும் அடியாட்களை வீட்டிற்கு அனுப்பி மிரட்டியதாகக் கூறிய நிலையில் அது தொடர்பாக எவ்வித புகார் தீபிகா அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.