தமிழ்நாடு

காதலுக்காக ஆணாக மாறிய பெண்... ஏமாற்றிவிட்டு பிரிந்து சென்ற காதலி!

காதலுக்காக ஆணாக மாறிய பெண்... ஏமாற்றிவிட்டு பிரிந்து சென்ற காதலி!

Sinekadhara

மதுரையில் தன்மீது காதல் வயப்பட்ட மற்றொரு பெண்ணை கட்டாயப்படுத்தி உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யவைத்து பரிதாபமாக ஏமாற்றிச்சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசுதா. இவர் மதுரை தமுக்கம் பகுதியில் உள்ள பூங்கா முருகன் கோயிலுக்குச் சென்றபோது ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த செந்திலா என்பவருடன் நட்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. செந்திலா ஊர்க்காவல்படையில் வேலைசெய்து வருகிறார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. இருவரின் வீட்டிற்கும் தோழிகளாக பழகுவது தெரிந்த நிலையில் வீட்டிற்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கின்றனர்.

அப்போது செந்திலா, ஜெயசுதாவிடம் பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்துகொண்டால் இந்த சமுதாயம் கேலி பேசும். எங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நீ ஆணாக மாறிவிட்டால் வீட்டில் யாருக்கும் தெரியாது எனக் கூறியதோடு, ஆணாக மாற வேண்டும் என கட்டாயப்படுத்தியதாகத் தெரிகிறது. மேலும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திருநம்பியாக மாறிக்கொள்ள அறுவைசிகிச்சை செய்ய திட்டமிட்டிருக்கின்றனர். அதன்படி, கடந்த டிசம்பர் 2021-இல் உடல் உறுப்பை அறுவை சிகிச்சையும் செய்ததாக கூறப்படுகிறது. அதோடு ஹார்மோன் ஊசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தியதன் பேரில் ஹார்மோன் ஊசியும் போட்டு வந்துள்ளார் ஜெயசுதா.

அறுவை சிகிச்சைக்குப் பின்பு ஜெயசுதா என்கிற பெயரை ஆதிசிவன் என மாற்றி, இருவரும் தைப்பொங்கல் அன்று திருப்பரங்குன்றம் மலைக்கு பின்னால் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோயிலில் திருமணமும் செய்து கொண்டுள்ளனர். செந்திலாவின் பெற்றோர்கள் அவரை இரண்டு மூன்று நாட்கள் தேடிய நிலையில் அவர் எங்கும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு பின்னர் ஆதிசிவனுடன் திருமணமாகி திருப்பரங்குன்றத்தில் ஒன்றாக வாழ்ந்து வருவதாக செந்திலா தனது அம்மாவிற்கு போன் செய்து கூறியுள்ளார்.

இதையடுத்து செந்திலாவை வீட்டுக்கு அழைத்துவந்து திருமணம் செய்துகொண்ட மாப்பிள்ளையின் விவரம் குறித்து விசாரித்தபோது, தோழியாக இருந்த ஜெயசுதாவைதான் ஆணாக மாற்றி திருமணம் செய்துகொண்டது பற்றி  செந்திலா தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் செந்திலாவின் உடைமைகளையும், பொருட்களையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செந்திலா பெற்றோர்கள் புகாரும் கொடுத்துள்ளனர்.

புகாரின்பேரில் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியதில் செந்திலா ஆதிசிவனுடன் ஒன்றாக வாழ பிடிக்கவில்லை என்றும், தனது பெற்றோருடன் செல்வதாகவும் கூறிவிட்டார். ஜெயசுதா என்ற ஆதிசிவனுடன் செல்ல மறுத்த நிலையில் காவல்நிலையத்தில் இருதரப்பினரிடமும் எழுதி வாங்கிவிட்டு அனுப்பிவிட்டனர். பாலினத்தை மாற்றி பணத்தையும் இழந்து, தாய் - தந்தையும் வீட்டில் சேர்த்து கொள்ளாததால் காதலிக்காக ஆணாக மாறிய ஜெயசுதா தற்போது பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறுகிறார். அத்துடன் தனக்கு உரிய நீதி வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளார்.