தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ஆயிஷா ஷபானா. பட்டுக்கோட்டையைச் சேர்ந்த இவர், திருமணத்துக்குப் பிறகு சென்னையில் கணவருடன் வசித்து வந்தார். கடந்த வருடம் நிறைமாத கர்ப்பிணியான அவர் பிரசவம் பார்ப்பதற்காகத் தனது தாய் வீடான பட்டுக்கோட்டைக்கு வந்துள்ளார். அங்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு ஆபத்தான நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஷபானா.
அங்கு அவருக்கு உடல்நிலை மோசமடைந்து வலிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுத்து தாயையும் சேயையும் பத்திரமாக காப்பாற்றியுள்ளனர்.
குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆன நிலையில் தனது குழந்தையின் பிறந்தநாளை, தனது குழந்தையையும், தன்னையும் காப்பாற்றிய பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொண்டாட வேண்டும் என விரும்பியுள்ளார் ஷபானா. இதற்காக சென்னையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு வந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோருடன் கேக் வெட்டி குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாகப் பேசிய ஆயிஷா ஷபானா, “இது எனது விருப்பம் மட்டுமல்ல, எனது கணவர் விருப்பமும் இதுதான். பட்டுக்கோட்டைக்கு வந்து அரசு மருத்துவமனையில் எங்கள் இருவர் உயிரையும் காப்பாற்றிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோரின் மத்தியில் எனது குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடினேன். இது எங்களுக்கு மிகுந்த மனநிறைவைத் தந்துள்ளது” என்றார்.
அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் மற்றும் நோயாளிகள், பார்வையாளர்கள் என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.