தமிழ்நாடு

சிகிச்சை எடுக்காமல் அலட்சியம்.. நாய்க்கடிக்கு ஆளான பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

சிகிச்சை எடுக்காமல் அலட்சியம்.. நாய்க்கடிக்கு ஆளான பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Sinekadhara

ராஜபாளையத்தில் நாய்க்கடிக்கு உரிய சிகிச்சை எடுக்காமல் அலட்சியம் காட்டிய 50 வயது பெண்மணி ரேபிஸ் நோய் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரை தடுப்பூசி செலுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஆலங்குளம் சக்தி நகரை சேர்ந்தவர் புஷ்பராஜ். பூ வியாபாரியான இவரது மனைவி 50 வயதான மாரியம்மாளை, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக வீட்டின் அருகே நாய் கடித்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து நாய்க்கடிக்கு முறையான சிகிச்சை எடுக்காமலும், தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளாமலும் மாரியம்மாளும் அவரது குடும்பத்தினரும் அலட்சியம் காட்டியுள்ளனர். இதனிடையே கடந்த சில தினங்களாக மாரியம்மாளின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை உடலின் பாகங்கள் செயலிழந்த நிலையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை அளிப்பதற்கு முன்பாகவே மாரியம்மாள் மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து தாமதம் செய்யாமல் மாரியம்மாளின் உடலை அடக்கம் செய்ய பரிந்துரைத்த மருத்துவர்கள், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.