ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் பணி ஜூலை மாதத்தில் நிறைவடையும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி முடித்த பின்னர்தான் புதிய கடைகள் திறப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிப்பதாகவும், பல நேரங்களில் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்ப வருவதாகவும் இதற்கு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஆலங்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ 2011 மே மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் 2016 வரை தமிழகம் முழுவதும் பகுதி நேரம் கடைகள் உள்ளிட்ட 2226 புதிய கடைகள் திறந்துளளதாக கூறினார். புது கடைகள் திறப்பதற்கான விதிகள் முறையாக பூர்த்தியாகும் பட்சத்தில் தடையின்றி புதிய ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்றார். மேலும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாகவும் ஜூலை மாதத்திற்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகள் முடிவடையும் என்றார். நியாயவிலை கடைகளில் பொருட்கள் இல்லாத நிலை இல்லை எனவும் பொருட்கள் இருப்பு உள்ளதா என்பது குறித்து பொதுமக்கள் 102 என்ற எண்ணில் அழைத்து தெரிந்து கொள்ளலாம் என பதிலளித்தார்.