தமிழ்நாடு

போராட்டத்தை கைவிடுங்கள்... முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

போராட்டத்தை கைவிடுங்கள்... முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

Rasus

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தமிழக அரசு அத்திட்டத்திற்கு அனுமதி அளிக்காது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். எனவே நெடுவாசலில் நடைபெறும் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் 14-ஆவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. நெடுவாசல் போராட்டக்குழுவைச் சேர்ந்த 11 பேர் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று காலை சந்தித்தனர். அப்போது, ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட நடவடிக்கை எடுக்குமாறு போராட்டக்குழுவினர் வலியுறுத்தினர்

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் வேலு, ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது என முதலமைச்சர் கூறியதாகத் தெரிவித்தார்.‌

இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் விவசாயிகளை பாதிக்கும் என்பதால் அத்திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். எனவே நெடுவாசல் மக்களும், விவசாயிகளும் அச்சப்படத் தேவையில்லை எனவும், அரசின் உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.