தமிழ்நாடு

”உதயநிதிக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்படுமா”? : கேள்விக்கு நழுவிய அமைச்சர் பெரியகருப்பன்

”உதயநிதிக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்படுமா”? : கேள்விக்கு நழுவிய அமைச்சர் பெரியகருப்பன்

sharpana

”உதயநிதி ஸ்டாலினுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டு அமைச்சராக பதவியேற்பாரா?” என்ற கேள்விக்கு அமைச்சர் பெரிய கருப்பன் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

டெல்லியில் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின அமுதப்பெருவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், “ஒருவார காலம் நடைபெறும் இந்நிகழ்வில் நீடித்த நிலைத்த வளர்ச்சி இலக்குகளை ஊராட்சிகள் அளவில் செயல்படுத்தி ஒருங்கிணைந்த நீடித்த வளர்ச்சியை எட்டிட எடுக்கவேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

குறிப்பாக, 9 முக்கிய ஆய்வுக் கருப்பொருட்கள் இலக்காக நிர்ணயம் வாழ்வாதாரம் நிறைந்த வறுமையற்ற கிராமம் ஏற்படுத்துதல், நோயற்ற ஊராட்சி, குழந்தைகள் மனிநேய ஊராட்சி, நீர் நிறைந்த ஊராட்சி, பசுமை ஊராட்சி, அடிப்படை வசதிகள் தன்னிறைவு பெற்ற ஊராட்சி, சமூக பாதுகாப்பு நிறைந்த ஊராட்சி, சிறந்த ஆளுமை கொண்ட ஊராட்சி மற்றும் பாலின சமத்துவம் கொண்ட ஊராட்சி ஆகிய தலைப்புகளில் விவாதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை இந்தியாவில் மாநிலங்களில் இல்லாத பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை நிகழ்வில் எடுத்துரைத்தேன். குறிப்பாக தமிழகத்தில் ஏற்கனவே சமத்துவபுரம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். மேலும், மத்திய அரசு தெரிவித்துள்ள அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த உள்ளோம். தமிழகத்தில் இருந்து 80 பேர் இன்று கலந்து கொண்டோம். தமிழகத்தினைப் பொருத்தவரையில் சுமார் 180 ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பசுமை ஊராட்சி, சிறந்த ஆளுமை கொண்ட ஊராட்சி உள்ளிட்ட 9 அம்சங்களை தமிழகம் உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளில் நிறைவேற்ற வேண்டும்” என மத்திய அரசு தெரிவித்துள்ளது என்றார்.

அவரிடம், “உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளாட்சிதுறை ஒதுக்கப்படும் என்ற ஒரு தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன, இது தொடர்பான நிலைப்பாடு என்ன?” என்ற கேள்விக்கு, உள்ளாட்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் பதிலளிக்க மறுப்பு தெரிவித்து நழுவினார்.