செய்தியாளர் வேதவள்ளி
இந்த ஆண்டிற்கான முதல் வங்கக்கடலுக்கான புயல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உருவான காற்றத்தழுத்தத் தாழ்வுப்பகுதி, தற்போது தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில், வடகிழக்கு திசையில் நகர, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. இது தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறப்போகிறது. அதனைத் தொடர்ந்து வடகிழக்கு திசையிலேயே நகர்ந்து மே 25 ஆம் தேதி காலை புயலாக வலுப்பெறும்.
இதன்பின் தொடர்ந்து வடக்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெறும். தொடர்ந்து வடக்கு திசையிலேயே நகர்ந்து, வங்கதேசத்திற்கு அருகே 26 ஆம் தேதி மாலை தீவிரப்புயலாக கரையைக் கடக்கும். புயலைவிட தீவிரப்புயலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புயலுக்கு ரெமல் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த புயலின் காரணமாக தமிழகத்திற்கு மழை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. புயலானது தமிழ்நாட்டை விட்டு விலகிச் செல்வதன் காரணமாக, தமிழ்நாட்டு உள்நாட்டு மாவட்டங்களில் ஏற்கனவே பெய்த மழையானது படிப்படியாக குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதேசமயத்தில் இந்த புயல் சுற்றி இருக்கும் காற்றை ஈர்ப்பதனால், அரபிக்கடலில் இருந்து வரும் காற்று கேரளாவிலும், தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை ஏற்கனவே மாலத்தீவு, லட்சத்தீவு போன்ற பகுதிகளில் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த புயலின் காரணமாக தென்மேற்கு பருவமழை மேலும் வலுவடைந்து சற்று முன்னதாகவே தமிழ்நாட்டில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.