தமிழ்நாடு

பொங்கலுக்குள் இலவச வேட்டி சேலையை அரசு வழங்குமா? முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி

பொங்கலுக்குள் இலவச வேட்டி சேலையை அரசு வழங்குமா? முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி

kaleelrahman

பொங்கல் பண்டிகைக்கு இலவச வேஷ்டி சேலையை அரசு வழங்குமா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டு முழுவதும் கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையிலும், வாழ்வாதாரத்தை உயர்த்தும் வண்ணமும் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 1983-ஆம் ஆண்டு இலவச வேட்டி சேலை திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டம், கைத்தறி நெசவாளர்களுக்கான வேலைவாய்ப்பு, ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலை என்ற இரு பெரும் கொள்கைகளை நிறைவேற்றும் வண்ணம் செயல்படுத்தப்பட்டது. 

அதிமுக அரசில் 2021-ஆம் ஆண்டில் கூட பொங்கலுக்கு முன்பாகவே 2 கோடியே 6 லட்சம் குடும்பங்களுக்கு 2,500 ரூபாய், பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், உலர்திராட்சை, முந்திரி, ஒருநீள முழுகரும்பு வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்காக 5,605 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இத்துடன் ஒரு கோடியே 80 லட்சத்து 42 ஆயிரம் பெண்களுக்கு சேலைகள், ஒரு கோடியே 80 லட்சத்து 9ஆயிரம் பேருக்கு வேட்டிகள் வழங்கப்பட்டது. இதற்காக 490.27 கோடி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 15 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் குடும்பங்கள், 54 ஆயிரம் விசைத்தறி நெசவாளர்கள் குடும்பங்கள் பயனடைந்தனர்.

தற்போது இந்த பொங்கல் திருநாளில் இலவச வேட்டி சேலை வழங்க 490.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டது என்று செய்திகள் வருகிறது. ஆனால், பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இதுவரை வேட்டி, சேலைகள் குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. ஆகவே மக்களுக்கு இது ஏமாற்றமாக உள்ளது. பொங்கல் 14 ஆம் தேதி வருவதற்குள்ளாகவே வேட்டி சேலையை மக்களுக்கு வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதிமுக முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.