பெரம்பலூர் அருகே தொடர்மழையின் காரணமாக கூத்துக்கலைஞர்கள் குடியிருப்பை தண்ணீர் சூழ்ந்த காட்சி, சில தினங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதனடிப்பைடையில் புதியதலைமுறை செய்த கள ஆய்வில், அவர்கள் 4 ஆண்டுகளாக பாதுகாப்பற்ற வீடு மற்றும் அடிப்படை வசதி ஏதும் இன்றி சிரமங்களை சந்தித்தது தெரியவந்துள்ளது.
பெரம்பலூர் அருகே கீழமாத்தூர் கிராமத்தில் உள்ளது கூத்துக்கலைஞர்கள் குடியிருப்பு. இங்குள்ள கலைஞர்கள் பலரும், ஊர் ஊராக சென்று ஆடிபாடி மற்றவர்களை மகிழ்வித்து அதில் கிடைக்கும் வருவாயை மட்டுமே வைத்து வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். இவர்கள் நிரந்தரமாக வாழ எண்ணி கீழமாத்தூர் அருகே சிறு நிலப்பரப்பை இவர்கள் வாங்கியுள்ளனர். கிடைக்கும் வருவாய் பசியாற்றவே போதாத நிலையில் வீடு கட்டவும் வழியில்லாமல் தவித்து வந்துள்ளனர் இந்த கலைஞர்கள். இருப்பினும் நிலம் இருந்ததால், அங்கே பழைய துணிகளால் டெண்ட் அமைத்து தங்கிவருகின்றனர்.
இப்படி அங்குள்ள 19 வீடுகளில் மின்வசதி, குடிநீர்வசதி, கழிப்பறை வசதி என ஏதும் இல்லை. வசதிகளற்று சிரமத்தோடு வாழும் இவர்களின் அந்த சிறு டெண்ட் பகுதியும் தொடர்மழையின் காரணமாக தண்ணீர் சூழ்ந்து மூழ்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஏற்பட்ட பாதிப்பை அம்மக்கள் வீடியோ எடுத்து வெளியிடவே, அது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வீடியோ வெளியானதை தொடர்ந்து, வருவாய்த்துறையினர் அப்பகுதிக்கு நேரில் சென்று விசாரித்தனர். அதன் முடிவில், மழைநீர் சூழ்ந்த குடியிருப்பில் தவித்த அக்குடும்பங்களை சேர்ந்த 46 பேரை மீட்டு நிவாரணமுகாமில் தங்கவைத்து தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள் அவர்கள்.
புதியதலைமுறை கள ஆய்வு செய்ததில், 4 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் தங்களுக்கு பாதுகாப்பான வீடு கட்டித்தரவில்லை என்று கூத்துக்கலைஞர்கள் நம்மிடையே புகார் தெரிவித்தனர். ஊரார் பிற தேவைகளுக்காக பயன்படுத்தும் நீரையே தாங்கள் பருகவும், உணவு சமைப்பதற்கும் பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டும் அவர்கள், நிரந்தர மின்சாரம் இல்லாததால் ஒவ்வொரு இரவையும் குழந்தைகளை வைத்துகொண்டு பயத்துடனே கடத்திவந்ததாக கவலை தெரிவிக்கிறார்கள்.
தற்போது நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அவர்களின் கோரிக்கை மற்றும் புகார் தொடர்பாக நமக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த ஆலத்தூர் வட்டாட்சியர் முத்துக்குமார் தெரிவிக்கையில், ‘இது குறித்து மாவட்டநிர்வாகத்திடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தார்.
பிழைப்பிற்காக பிறரை மகிழ்வித்து, கவலையுடன் வாழ்ந்து சிரமங்களை சந்தித்து வரும் கீழமாத்தூர் கூத்துக்கலைஞர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- ஆ.துரைசாமி
தொடர்புடைய செய்தி: செய்தி எதிரொலி: அடிப்படை வசதிகளால் புத்துயிா் பெறும் இருளர் குடியிருப்பு