தேசிய புலிகள் காப்பக ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், சுற்றுலாவுக்காக திறந்துவிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், 1 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. இங்கு புலிகள் வாழ்வதற்கு ஏற்ற வனச்சூழல் உள்ளதால் புலிகளின் எண்ணிக்கை 55ஐ தாண்டியுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த புலிகள் காப்பக பகுதிகளை கண்டு களிக்க, வனச்சுற்றுலாத் திட்டம் அக்.5ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கு பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வனச்சுற்றுலா பயணிகளிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சுற்றுலாத் திட்டத்திற்கு முன் ஏற்பாடாக, பண்ணாரியில் 5 ஏக்கரில் ரூ.1.50 கோடி செலவில் டிக்கெட் கவுன்டர், பயணிகள் ஓய்வறை மற்றும் குழந்தைகள் விளையாட புல் தரை ஆகிய பணிகள் துவங்கியுள்ளன. தற்போது பண்ணாரியில் வனத்தில் புலி உலாவுவது போல சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை விலங்குகள் தாக்காதபடி பேட்டரி மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது. அதே போல ஆசனூரில் புலி உருவம் போன்று டிக்கெட் கவுன்டர் மற்றும் ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது. தாளவாடி, கேர்மாளம், தலமலை ஆகிய வனச்சரகங்களிலும் வனச்சுற்றுலா பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. வனச்சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் வாரந்தோறும் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை சத்தியமங்கலம் வன அலுவலகத்தில் முன்பதிவு செய்யலாம்.