அழிந்துவரும் அரிய வகை சிங்கவால் குரங்குகளை பாதுகாக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தின், மேட்டுப்பாளையம் பகுதி மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் குறிப்பாக கல்லார் காட்டுப்பகுதியில் காண்பதற்கு அரிதான சிங்கவால் குரங்குகள் அதிகளவில் உள்ளன. இவ்வகை குரங்குகள் பசுமைபோர்த்திய அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் மலைக்காடுகளில் தான் தங்களது வாழ்விடமாக கொண்டிருக்கும். மிக உயரமான மர உச்சிகளில் வசிக்கும் இவை மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவை. இத்த வகை குரங்குகளின் முகத்தை சுற்றிலும் அடர்ந்த ரோமத்தோடு சிங்கத்தினை போலவும், குறிப்பாக இதன் வால் சிங்கத்தின் வால் போலவே காட்சியளிப்பதால் இவை சிங்கவால் குரங்குகள் என்றழைக்கப்படுகிறது. கூட்டமாக வாழும் இயல்புடைய இவை காடுகளில் கிடைக்கும் பழங்கள் மற்றும் அதன் விதைகளையும் தான் உணவாக உட்கொள்கின்றன.
சமீபகாலமாக மலைகள் மற்றும் இதன் அடிவாரப்பகுதிளில் இவற்றின் வாழ்விடங்கள் சுருக்கபட்டுக்கொண்டே செல்கிறது. இவற்றுக்கான இயற்கையான உணவு வகைகள் காட்டுக்குள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாகவும் இவற்றின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வருகின்றன. எனவே அழிந்து வரும் பட்டியலில் இடம் பெற்றுள்ள சிங்கவால் குரங்குகளை பாதுகாக்கும் வகையில் அதன் வாழ்விடத்தை விரிவுபடுத்தபடுத்தி அவை வாழ ஏற்ற சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.