தமிழ்நாடு

பவானிசாகர் அணை கரையில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் - வனத்துறை எச்சரிக்கை

பவானிசாகர் அணை கரையில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் - வனத்துறை எச்சரிக்கை

webteam

பவானிசாகர் அணையின் கரையில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுப்பணித் துறை ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.

பவானிசாகர் அணை நீர் தேக்கப் பகுதியை ஒட்டி பவானிசாகர் மற்றும் விளாமுண்டி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனத்தையொட்டியுள்ள பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதிக்கு யானைகள் நீர் அருந்த வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் பவானிசாகர் அணைக்கரையில் வளர்ந்துள்ள புற்களை உண்ண குட்டிகளுடன் வந்தன.

இதையடுத்து அங்கு செழித்து வளர்ந்த புற்களை உண்டபடி அங்கேயே உலா வந்தன. 3மணி நேரமாக யானைகள் அணையின் கரைப் பகுதியில் முகாமிட்டுள்ளதை கண்ட பொதுப்பணித் துறை ஊழியர்கள் அச்சமடைந்தனர். அணைக்கு வரும் நீர்வரத்தை கணக்கிட பொதுப்பணித் துறை ஊழியர்கள் அணைக்கரை வழியாக செல்லும் நிலையில் யானைகள் முகாமிட்டதால் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் சிரமத்துக்குள்ளாகினர்.

இந்நிலையில், அங்கு வந்த வனத் துறையினர் யானைகளை காட்டுக்குள் விரட்டினர். பவானிசாகர் அணையின் கரையில் நடமாடும் காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள முட்புதர் காட்டில் முகாமிடுவதால் பவானிசாகர் அணை மற்றும் கரைப் பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை மேய்ச்சலில் ஈடுபடுவோர் அப்பகுதியில் செல்ல வேண்டாம் என பொதுப்பணித் துறையினர் மற்றும் வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.