செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமத்தூர் பகுதியில் உள்ள ஜவ்வாது மலைவாழ் மக்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் 22 பேர், நேற்று விடுமுறையையொட்டி தங்களது பெற்றோர்களுடன் மலைச்சாலை வழியாக புதூர் நாடு மலை கிராமத்திற்கு வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, காவலூர் அடுத்த அருணாசலக்கொட்டாய் பகுதியில் மலை சாலையில் நின்று கொண்டிருந்த ஒற்றைக் கொம்பு காட்டு யானையைக் பார்த்துள்ளனர்.
இதையடுத்து பள்ளி மாணவர்கள் அனைவரும் வாகனத்தில் இருந்து இறங்கி ஓடியுள்ளனர். இதைத்தொடர்ந்து மாணவர்கள் சென்ற வாகனம் மற்றும் 2 இருசக்கர வாகனம் ஆகியவற்றை ஒற்றைக் கொம்பு காட்டுயானை சேதப்படுத்தி முட்புதரில் தள்ளியது. இதையடுத்து பள்ளி மாணவர்கள் மாற்று வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று காலை மலைகிராம மக்கள் ஒன்றிணைந்து, ஜே.சி.பி இயந்திரம் மூலம் முட்புதரில் கவிழ்ந்த வாகனத்தை கயிறு கட்டி மீட்டனர். மேலும் ஒற்றைக் காட்டு யானையின் நடமாட்டத்தை ஆலங்காயம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.