தமிழ்நாடு

பிடிபட்டது சின்னதம்பி யானை !

பிடிபட்டது சின்னதம்பி யானை !

webteam

திருப்பூர் மாவட்டம் கண்ணாடிப்புதூரில் முகாமிட்டிருந்த சின்னதம்பி யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கண்ணாடி புத்தூரில் சின்னதம்பி யானை முகாமிட்டிருந்தது. சில நாட்களாக அதனுடைய நடத்தை வேகத்தோடு காணப்பட்டது. இதனால் சின்னதம்பி யானையின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதாக கூறி சின்னதம்பி அருகில் யாரும் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். 

இதற்கிடையே சின்னதம்பியை கும்கி யானையாக மாற்றாமல், மீண்டும் வனத்துறைக்கு அனுப்ப வேண்டும் என முரளிதரன், அருண் பிரசன்னா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதற்கிடையே சின்னதம்பியை பிடிக்க அனுமதி வழங்குமாறு வனத்துறை கோரிக்கை விடுத்திருந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், சின்னதம்பியை பிடிக்க வனத்துறைக்கு அனுமதி வழங்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் சின்னதம்பியை பிடிக்கும்போது காயப்படுத்தவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது எனவும் அறிவுறுத்தியது. இதனையடுத்து சின்னதம்பியை பிடிக்க வனத்துறையினர் முனைப்பு காட்டினர். சின்னதம்பியை பிடிக்க  கடந்த முறை ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இதனால் சின்னதம்பியின் உடலில் காயங்கள் ஏற்பட்டன. அதனால் இந்த முறை ஜேசிபி இயந்திரம் இல்லாமல் மயக்க ஊசி மற்றும் கும்கி யானைகள் உதவியுடன் சின்னதம்பியை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

அதன்படி திருப்பூர் மாவட்டம் கண்ணாடிப்புதூரில் முகாமிட்டிருந்த சின்னதம்பி யானையை இன்று வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். மொத்தம் 4 முறை மயக்க ஊசி செலுத்த முயற்சி செய்தனர். இதில் இரண்டு முறை மட்டுமே யானையின் மீது மயக்க ஊசி பதிந்தது. தற்போது சுயம்பு மற்றும் கலீம் கும்கி யானைகள் உதவியுடன் யானையை லாரியில் ஏற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.