தமிழகம் மற்றும் ஆந்திரா பகுதிகளில் 6 பேரை கொன்று ஆக்ரோஷமாக சுற்றி வரும் இரண்டு ஆண் காட்டு யானைகள் இன்று திருப்பத்தூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையை கடந்து கிராமத்துக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு ஆண் யானைகள் கடந்த இரண்டு மாதமாக மாரண்டஹள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம் வழியாக போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம் பகுதிகளில் சுற்றி திரிந்து வந்தது. இந்நிலையில் 6ம் தேதி கிருஷ்ணகிரி நகரம் அருகில் உள்ள தேவசமுத்திரம் ஏரியில் முகாமிட்டது. ஏரி தண்ணீரில் உற்சாகமாக குளித்து விளையாடிய இரண்டு யானைகளை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் கண்டு ரசித்தனர்.
தொடர்ந்து 7ம் தேதி அதிகாலை கிருஷ்ணகிரி நகருக்குள் வந்த யானைகள் சாமந்தமலைக்கு சென்றன. அங்கு ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற மீன் குத்தகைதாரரான அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரை யானைகள் தந்தத்தால் குத்தியதில் குடல் சரிந்து உயிரிழந்தார். பின்னர் அதே பகுதியில் உள்ள மாந்தோப்பில் முகாமிட்டிருந்த யானைகளை வனத்துறையினர் விரட்டினார்கள். ஆனாலும் கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த கன மழையால் யானைகளை விரட்டுவதில் சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று யானைகளை விரட்டும் பணிகள் நடந்தன. தொடர்ந்து மகாராஜகடை அருகே உள்ள மூலக்காடு பகுதிக்கு இடம்பெயர்ந்த யானைகளை அங்கிருந்து நாரலப்பள்ளி காப்புக்காடு வழியே பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்பூங்குருத்தி வனப்பகுதிக்கு விரட்டினர். அப்போது அவ்வழியே இருந்த விவசாய விளை பொருட்களை சாப்பிட்டும், மிதித்தும் நாசம் செய்தன. பின்னர், அந்த யானைகளை இன்று ஆந்திரா மாநில வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். யானைகள் அட்டகாசம் காரணமாக மகராஜகடை சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் யாரும் வெளியே வர வேண்டாம்.
காவலுக்கு இருக்க வேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர். இதனால் வயல்வெளிகளின் அருகில் சமையல் செய்து சாப்பிட்டு வந்த விவசாயிகள் பலரும் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே 2 நாட்களாக முடங்கி கிடந்தனர். கிருஷ்ணகிரி பகுதியில் அட்டகாசம் செய்து வந்த யானைகள் ஆந்திரா மாநில வனப்பகுதிக்கு விரட்டப்பட்டதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் ஆந்திரா மாநிலம் வனப்பகுதி ஒட்டி உள்ள மல்லானூர் பகுதிக்கு சென்ற இரண்டு யானைகள் அங்கு உஷா மற்றும் சிவலிங்கம் ஆகியோரை மிதித்து கொன்றது அதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஆந்திர அரசு சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அளிக்கப்பட்டது.
பின்னர் ஆந்திராவில் இருந்து விரட்டப்பட்ட இரண்டு யானைகள் தற்போது தமிழக எல்லையில் உள்ள திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ஆத்தூர் குப்பம் தகரகுப்பம், கரடி குட்டை, தண்ணீர் பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு சுற்றி வருகிறது இதை தமிழக வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர் சம்பவ இடத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் யானை விரட்டும் பணியை ஆய்வு செய்து வருகின்றனர்.